பிம்பிலிக்கே பிலாப்பி

     சட்டென்று ஒரு பெஸ்ட் ஐடியா தோன்றியது.

     வேகமாக "செல் சிட்டி" யை  நெருங்கினேன்.அந்த கடை பத்துக்கு பத்து அளவில், கண்ணாடி  கதவுடன் பளபளத்தது.  மேலே பார்த்தேன், யாரோ ஒரு வெள்ளைக்கார பெண் தனது அங்க லட்சணங்களை அனைவருக்கும் காண்பித்தவாறே நோக்கியா போனில் பேசிக்கொண்டிருந்தாள். அவளின் தலைக்கு மேலே எல் ஜி, சோனி எரிக்சன், மோட்டோரோலா, சீன மொபைல்கள் என அனைத்தும் வரிசையாக "குளோ எபெக்டுடன்" மின்னியது.

     கணினி, ஐ.சி-க்கள், ஹெட்செட்டுகள், பேனல்கள், ரீசார்ஜ் கார்டுகள் என கடைக்கு பொருத்தமான பண்டங்களை விளம்பர பலகையில் வைக்கலாமே  என்ற கண்ணிய எண்ணம் என் மூளையில் அப்போது தோன்றியது. ஒன்று கடையின் முதலாளி கலா ரசிகனாக இருக்க வேண்டும், இல்லையேல் டிசைன் செய்தவன் நம் ஊர் மக்களின் மன நிலையை பற்றி பிஎச்டி படித்திருக்க வேண்டும். கார்டு சுரண்ட வருபவர்கள், போனில் குறைபாடு உள்ளவர்கள் என அனைவரும் வெள்ளைக்காரிக்கு மயங்கி தன்னுடைய கடைக்கு வந்து விடுவார்கள் என்று முதலாளி நினைத்து விட்டார் போலும்.  என்ன கருமமோ, அந்த வெள்ளைக்காரி என்னையும் இரண்டாவது முறை பார்க்கவைத்தாள். நம் ஊர் "தொழில் அதிபர்களுக்கு" என்னே சிந்தனை! விளம்பர பேனரில் கூட மக்களை  கவர்ந்து விடுகின்றனர். கதவை திறந்து உள்ளே சென்றேன்.

     "ஒரு ஏர்டல் பத்து ரூபா டாபப்"- இது நான்.

     "ஈசியா? கார்டா?" இது செல் சிட்டி தொழிற்சாலயின் அதிபர்.

     "ஈசி தான்"

     "நம்பர போடுங்க"

     "சிங்கு சான் சிங்கு சான்"  என்ற நிறத்தில் சட்டை, கட்டை விரலை தவிர ஏறத்தாழ அனைத்து விரல்களிலும் மோதிரம், ஒரு மாதத்தில் நல்லா பூரிப்பு அடைந்த அவரது உடல், என அனைத்து சமாச்சாரமும் சமீபத்தில் கல்யாணம் ஆகி இருக்கும் என்பதற்கு சான்றாக இருந்தது.

     மாமனார் உழைப்பில் கிடைத்த கணையாழி சகிதமாய் இருந்த அவரின் கைகளிலிருந்து போனை வாங்கி, என்னுடைய நம்பரை அதில் இட்டேன்.

     ஐந்நூறு ரூபாய் தாளை கொடுத்தேன்.

     "அட, என்னப்பா நீ? சில்லறைய கொடுப்பா?"

     "ஐயையோ, சில்லறைய மறந்துட்டேன்"

     "ஏன்யா காலங்காத்தால தாலியறுக்குற? போனி வேற பண்ணிட்டேன், கடன் சொல்லாத. கொஞ்சம் இரு மாத்தி தர்றேன்"
   
     வெளியே சென்றார், அநேகமாக கறிக்கடைக்கு தான் சென்றிருக்க வேண்டும், அவன் தான் இந்நேரத்திற்கு சில்லறை பணம் பட்டுவாடா செய்யும் அளவிற்கு திராணி உள்ள தொழிலதிபர். வரும்போது கறிக்கடைகாரனிடம் கேட்டுவிட்டுதான் வந்தேன். இருந்தாலும் கிடைக்கவில்லை. இப்போது செல் சிட்டியின் அதிபர் கேட்பதால் கிடைத்துவிடும். தொழிலதிபர்களிடயே என்ன ஒரு ஒற்றுமை? இரண்டு நிமிடத்தில் வந்து,   நானூற்றி தொண்ணுறு ரூபாயை என் கையில் திணித்தார். "சரி வரண்ணே"- சொல்லிவிட்டு கிளம்பினேன்.

      காலைல பத்து மணிக்கி எவன் ஐந்நூறு ரூபாய்க்கு சில்லற கொடுப்பான்? என்னுடைய இந்த பெஸ்ட் ஐடியாவை நானே மெச்சிக்கொண்டு, எனக்கு நானே பாராட்டு பத்திரம் வாசித்துக்கொண்டேன்!

     இன்னும் நான்கு தெருக்களுக்கு அப்பால் இருக்கிறது, ரேஷன் கடை. அவனிடம் ஐந்நூறு ரூபாயை கொடுத்து அவன் திட்டுக்களுக்கு ஆளாக முடியாது. எனவே தான் காலையில் செல் சிட்டியின் தொழிலதிபரை தாலியறுத்தேன். அதிலும் அந்த ரேஷன் கடையில் பில் போடும் "ஆபீசருக்கு" இந்த ஊரிலே அனைவருக்கும் தான் தான் "படியளக்கும் பகவான்" என்ற எண்ணம் வேறு! இத்தனை இடைஞ்சலுக்கு இடையில், உங்களுக்காக தான் உட்கார்ந்து இருக்கிறேன் என்று அவ்வபோது காட்டிக்கொள்வார். சில நேரம், உப்பு போறாத விஷயங்களுக்கு கூட கோபப்பட்டு தன்னுடைய அதிகாரத்தை பற்றி பிரசங்கம் பேசுவார். நம் மக்களும், அவர் பேசுவதை கேட்டு சண்டையை நிறுத்திவிடுவர். முடிவில் ஏதோ காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டதை போல், "கௌரவம் படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் கௌரவமாக முகத்தை வைத்திருப்பது போல்"  தன் முகத்தை வைத்துக்கொள்வார். பெருமை மிகுதியால், அன்றைக்கு மட்டும்  சிரத்தையுடன் வேலை செய்வார், நுகர்வோர்களுக்கும் நல்ல உபசரிப்பு கிடைக்கும். 

      இந்த கௌரவ சமாச்சாரத்தின் பயனாக, பல தடவை சுமூகமாக பொருட்களை வாங்கியதுண்டு!

     இன்றும் "நம் நாட்டின் கண்கள்" ரேஷன் கடைக்கு வெளியே சண்டை போட்டால் நன்றாக இருக்குமே! பொருட்களை சுமூகமாக வாங்குவதற்காக சொல்லவில்லை. அந்த ஆபிசரின் கௌரவ முகத்தை காண்பதற்கு! நல்ல வேடிக்கையாக இருக்கும்.

     ரேஷன் கடை என்று இதற்கு நாமகரணம் சூட்டியவர் யார்? நியாயமான விலையில் கிடைப்பதால் (?) , நியாய விலைக்கடை என்று அரசு பெயர் வைத்துள்ளது. என்னை பொறுத்தவரை,  அநியாய விலைக்கடை என்று சொல்லலாம். அல்லது " irration " கடை என்றும் சொல்லலாம்.
 
     கடையை அடைந்தேன். அங்கே,  கடையோரத்தில் உள்ள சாக்கடை நன்னீரில் ஒரு சிறுவன், ஒரு அடி அளவுள்ள ஒரு குச்சியை விட்டு கப்பலோட்டிக்கொண்டிருந்தான். அநேகமாக பந்து விழுந்திருக்க வேண்டும். அதனருகில் ஒரு நான்கு சிறுவர்கள், அவனை கட்டளையிட்டு கொண்டிருந்தனர். என் யூகம் சரியாக இருந்தால், இதுதான் நடந்திருக்க வேண்டும்! அந்த சிறுவன் பந்தை அடித்திருப்பான், அது தெருவோர தீர்த்தவாரியில் ஸ்நானம் பண்ணிகொண்டதின் பயனாக இப்போது அவன் சாக்கடையை கிளறுகிறான்.

     ஆண்கள் கியூவில் ஒரு பதினைந்து பேர், பெண்கள் கியூவில் சுமார் ஒரு முப்பது பேர்.

     எப்போதும் அன்னப்பூரணிகளின் வரிசை தான் அதிகமாக உள்ளது!  ஆண்கள் கியூவில் கடைசியாக போய் நின்றேன். முன்பு எனக்கு தோன்றிய பெஸ்ட் ஐடியா இப்போதும் தோன்றியது. குடும்ப அட்டையை அதன் கவரிலிருந்து கழற்றினேன். கவரையும் குடும்ப அட்டையையும் இரண்டாக கையில் வைத்துக்கொண்டேன். கடைசியில் நின்று, எவ்வாறு கியூவில் முன்னேறலாம் என்று யோசனையில் இருந்தேன்.

     "ஆயிரம், ரெண்டாயிரம், நாலாயிரம், ஆறாயிரம், எட்டாயிரம், பத்தாயிரம்... பிம்பிலிக்கே பிலாப்பி" முன்னாடி இருந்தவரின் செல் போன் அடித்தது.

     அதை கேட்டதும் அனைவரின் பார்வையும் அவரின் மேல் இருந்தது. வித்தியாசமான டோன்களை வைப்பதில் நம் ஊர் மக்களை அடித்துக்கொள்ள முடியாது. சொல்லிவைத்தார் போல், அந்த செல்போன் ஆசாமியும் பாண்டியராஜன் போலவே தோற்றமளித்தார். அதே திருட்டு முழி! ஒருவேளை அவருடைய பரம விசிறியாக இருக்கலாம்!
  

     சற்று நேரத்தில் ஒரு பெண்மணி என்னை நோக்கி வந்தாள்.

     "தம்பி, வீட்ல அடுப்புல உலைய வச்சிட்டேன், கொஞ்சம் இந்த கார்டுக்கு மட்டும் கொஞ்சம் அரிசி வாங்கி தர்றீங்களா?"

     "ஐயையோ, என்கிட்டே ஏற்கனவே ரெண்டு கார்டு இருக்கே!"

     "ம்ச்," என்று சொல்லிவிட்டு தன்னுடைய இடத்தில் போய் நிற்க போனாள்.

     "த, எங்க சந்துல பூர்ற? கடசீல போ" என்று ஒரு சொர்ணாக்கா சொன்னாள்.

     "இன்னது, நான் இங்க தான் நின்னேன், அந்த தம்பிகிட்ட பேசிட்டு வந்தேன்"

     "சொம்மா, இந்த கதையெல்லாம் இங்க உடாத. போய் லாஸ்ட்ல நில்லு. அங்கேந்து ஆட்டினு வந்துடிச்சி"

     "தம்பி, சொல்லுங்களேன். இல்லன இவங்க இங்க நிக்க உடமாட்டாங்க"

     "ஆமாங்க, அங்க தான் நின்னுட்டு இருந்தாங்க" என்றவாரே அவர்களை நோக்கி சென்றேன். அந்த கணத்தில் என் தலை மீது 2-டி கார்டூனில் ஒரு பல்பு எரிந்தது.

     "இங்க பாருங்கமா, அந்த பொம்பள என்கிட்டதான் பேசிட்டு இருந்தாங்க, தள்ளுங்க"

     நான் கொஞ்சம் வல்கராக பேசவே, கொஞ்சம் சலசலப்பானது. சற்று நேரத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

     ஆபீசர் பார்வைக்கு இப்பிரச்சனையை எடுத்து சென்றனர்.

     வந்தார். சூடாக இருந்தார். கார்கில் பிரச்சனையை (?) சமாளித்தார் (!). சுமூக தீர்வு கண்டார். சிவாஜி கணேசன் முகபாவத்தோடு, தன் இருக்கையில் போய் உட்கார்ந்தார்.

     நிற்க, பல்பு எரிந்ததற்கான கர்மவினை இதுவல்ல.

     அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், நான் என்னுடைய இடத்திற்கு செல்லாமல், நான்கு நபர்களுக்கு முன் சென்று நின்றேன். மறுபடியும் காஷ்மீர் பிரச்சனை தொடங்கியது. விஷயம், ஆபிசரின் காதுகளில் விழுவதற்குள் "காம்பிரமைஸ்" ஆகி, சமாதானம் அடைந்து, நான் முன்னேற வழிவிட்டனர்!

     என்னை பார்த்து அனைவரும் "அடப்பாவி" என்ற வார்த்தையை கண்ணாலே பேசினர். எனக்கு சிரிப்பு கலந்த பெருமையாக இருந்தது. மறுபடியும் என் புத்திக்கு பாராட்டு சர்டிபிக்கேட் சமர்பிக்கப்பட்டது.

     பர்சில் இருக்கும் பணத்தை எடுத்து கையில் வைத்துக்கொள்வோம் என்று நினைத்தவனாய் பின்பக்க பேன்ட் பாக்கட்டில் கை விட்டேன்.

     அம்பது பைசா தான் இருந்தது.

     ஆஹா! கலவரத்தில் யாராவது அடித்திருக்கவேண்டும். எனக்கு முன்னாடி இருந்தவரும் வாங்கிவிட்டார். இப்போது நான் தான் வாங்கியாக வேண்டும். உடனே, வரிசையை விட்டு நகர்ந்து விட்டேன். வெளியே சொன்னால் அசிங்கம். நானூத்தி தொண்ணூறு ரூபாயும் அம்பேல்! யார் எடுத்திருப்பார்? அனைவரின் முகத்தையும் பார்த்தேன். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

     இதற்கிடையில் கப்பலோட்டிய தமிழனின் துடுப்பில் பந்து சிக்கியது போலும். அவன் அதை எடுத்து மேலே தூக்கிபிடித்து,



     "பிம்பிலிக்கே பிலாப்பி" என்று சிரித்தவாறே சொன்னான்!

எக்ஸ்கியூஸ்மி, கொஞ்சம் இந்த கட்டுரைக்கு தலைப்பு வையுங்க!

     எவ்வுளவோ யோசிச்சி பார்த்தேன், தலைப்பு ஒன்னும் வைக்க முடியல. நீங்க வேணும்னா ட்ரை பண்ணுங்க!


      சில விஷயங்கள் தப்புன்னு தெரிஞ்சும், அந்த தப்ப மீண்டும் செய்ய மனசு துடிக்கும்

     கணினியே கடவுள். ஒரு ஆத்திகனின் பார்வையில், எவ்வுளவு தான் சரியாக பேசினாலும், கடைசியாக  கடவுள் என்றால்,
1 .நம்மை படைத்தவர்,
2 .நம்மை காக்கின்றவர்,
3 .நாம் வாழ உதவி செய்பவர்,
4 .இறுதியாக, நம்மை அழிப்பவர்.
அந்த கடவுள்,  இந்த நான்கை மட்டுமே செய்பவராக இருப்பார்!
இன்று, கணினி இந்த நான்கு செயல்களையும் கடவுளை விட சிறப்பாகவே செய்கிறது! எடுத்துக்காட்டு கூற வேண்டியதில்லை என நம்புகிறேன்.

    நாத்திகர்களுக்கு: ஆத்திகர்களின் கடவுளின் மேன்மைக்கு ஒப்பாக ஒரு பொருளை கற்பனை செய்துகொள்ளுங்கள். அதனோடு கணினியை ஒப்பிட்டு கொள்ளுங்கள்! 

     சரி விஷயத்திற்கு வருவோம். Chat online, tickets online, banking online, books online, mail online, dating online, travel online, jobs online, shopping online, gaming online, socialising online, cinema online என அனைத்துமே இன்று online என்று மாறிவிட்டது. போகிற போக்கில் ஆன்லைனில் திருமணம், ஆன்லைனில் கோவில் தரிசனம், ஆன்லைனில் ஹோட்டல் என்று அனைத்துமே மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. நான் சொல்வது சற்று விநோதமாக இருக்கலாம்! நூறு வருடங்களுக்கு முன்பு ஒரு மனிதனிடம்,
"அடேய் மனிதா, வீட்டில் உள்ளபடியே இந்த உலகத்தை ரசிக்கலாம், ருசிக்கலாம், பழகலாம், கற்கலாம், ஏன் கொல்லலாம்" என்று சொன்னால், அவன் "தம்பி, வெய்யில்ல அதிகமா சுத்தாதீங்க, தலைக்கு எலுமிச்சை தேச்சி குளிங்க என்று அட்வைஸ் பண்ண ஆரம்பித்துவிடுவான்"

     நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இன்று இணையத்தின் வளர்ச்சி பரிணமித்து, பரந்து விரிந்து மனித வாழ்வை எளிமையாக்கி விட்டது!குண்டூசி வாங்குவது முதல், கப்பல் வாங்குவது வரை என, அனைத்துமே இன்று கணினிமயமாக்கல் தான்! மூன்று வேளை உணவும், இணையம், கணினியும் இருந்தால் ஒரு குழந்தைக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்று சொல்லும அளவிற்கு இன்று அதில் உள்ள வளங்கள் பெருகி உள்ளன!


     இதில், பின்லாந்து நாட்டில் 98.8% மக்கள் broadband இணைப்பு பெற்றுள்ளனராம்! அந்நாட்டு அரசாங்கம் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளாக   உணவு, உடை, இருப்பிடம் என்ற வரிசையில் broadband internet connectionஐயும் சேர்த்துள்ளது! நல்ல விஷயம் தான்

     நிற்க, அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு!


     நாம் மனிதர்கள், சமுதாய விலங்குகள்(social animals), social networking-லேயே வாழ்கையை ஓட்டும் அளவிற்கு நாம் இன்னும் செல்லவில்லை! மற்ற உயிரினத்திலிருந்து நம்மை வேறுபடுத்தி காட்டுவதே நம்முடைய சமுதாய பழக்கங்களும், அதை சார்ந்த வழக்கங்களும் தான். இப்படி இணையத்தினால் (அதிலும் குறிப்பாக சமுதாய வலைத்தொடர்பு வலைமனைகள்!, social networking websites) நாம் நம்முடைய தனித்துவத்தையும்,  அடையாளத்தையும் முற்றிலுமாக இழக்கிறோம் என்பதே உண்மை!


     நேரில் பேசி பழகி, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட  காலம் போய் இன்று உட்கார்ந்த இடத்திலேயே நிச்சயதார்த்தம் வரை முடித்துவிடுகிறோம்! முற்றிலும், இயந்திரத்தனமாக 15 அங்குல திரையை கண்டு, அது சொல்வதை நம்பி, அதிலேயே லயித்து, ஒரு காலத்தில் அது இல்லாமல் போனால் பைத்தியம் பிடிக்கும் அளவிற்கு அடிமையாகிறான்!  மனிதனைப்போன்று ஒரு விசித்ரமான  ஜீவராசியை இந்த அண்டத்தில் எங்கும் காணமுடியாது! தான் உருவாக்கிய ஒன்றில் தன்னையே தொலைத்து, மீள வழி இருந்தும், இல்லாதவனாய் தன்னை காட்டிக்கொண்டு, இருட்டறையில் இருந்து தப்பிக்க பல ஜன்னல்கள் இருந்தும், ஏனோ எலிப்பொந்துகளில் நுழைய முற்படுகிறான்!

     கண்ணை விற்று, ஓவியம் வாங்குவதா? உன் அடையாளத்தை தொலைத்து மனிதம் செய்கிறாயா?

     இது என்ன, அவ்வுளவு பெரிய பிரச்சனையா? ஆம்! அர்ஜென்டீனாவில் ஒரு தாய், தனது 9 மாத குழந்தைக்கு பாலூட்ட மறந்து தொடர்ந்து 13 மணி நேரம், வெளியூர் சென்ற தனது கணவனிடம் முகநூல் (facebook) வழியாக அரட்டை அடித்ததில் பசியால் அந்த குழந்தை இறந்தே போனது!

     அவ்வுளவு ஏன், அர்ஜென்டீனாவிற்கு ஏன் செல்கிறீர்கள்? நாம் இந்தியாவில், திரிபுரா மாநிலத்தில் மருத்துவம் பயிலும் 22 வயது மாணவன், யாரோ orkutஇல் அறிமுகமான பெண்ணை இரு வருடம் கணினியிலேயே காதலித்தான்! அவளும் வழக்கம் போல பெப்பே  காட்டிவிட்டாள்! விளைவு மருத்துவ கல்லூரி மாணவன் தற்கொலை! சம்பவம் நடைபெற்ற தேதி 5/11/2010 , ஆதாரம் ஹிந்து தினசரி!

     இந்த கதைகள் அனைத்தும், சமுதாய தளங்களின் தீங்கு என நினைக்க வேண்டாம்! இவை மனிதனை எந்த அளவிற்கு ஆட்கொண்டு இருக்கிறது என்பதை மட்டும் காண்க!

     மனிதத்தின் தனித்துவத்தை இழந்து, இப்படி கேவலமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்! இந்த கேவலத்தை நிகழ்த்த தெரிந்திருந்தால், அவர்கள் அறிவாளிகள், hi-tech ஆக வாழ்பவர்கள்! தெரியாதெனின் அவர்கள் முட்டாள்கள்!

     ஆக,  சமுதாய வலைமனைகளால் நமக்கு எள்ளளவு நன்மை ஏற்படினும், புகழ்வோம்! மலையளவு தீமை ஏற்படினும், இகழோம்! நாம் அவற்றை விட்டுக்கொடுக்க போவதும் இல்லை! எது நடந்தாலும் நானும் facebookil கட்டுரைகளையும், கதைகளையும் வெளியிடாமல் இருக்கபோவது இல்லை! நீங்களும் அதை படிக்காமல் இருக்கபோவதும் இல்லை!

அடியேனுக்கு நேர்ந்த அறுவை அனுபவம்!

      (கொஞ்சம் மொக்கையா தான் இருக்கும், இருந்தாலும் படிங்க... அப்பத்தான் இந்த ரவி எந்த அளவுக்கு கஷ்ட பட்டான்னு தெரியும்)

     சனிக்கிழமை.

      ஊருக்கு போகலாமே என்று நினைத்து மூட்டை முடிச்சிகளை கட்டி கிளம்ப ஆயத்தாமானேன். என்னுடய கொழுப்பு தான்,  ஒழுங்காக பேருந்தில் போய்  இருக்கலாம். கேவலம் 20 ரூபாய் மிச்சபடுத்த ஆசைப்பட்டு ட்ரெயினில் போய் வம்பில் மாட்டிக்கொண்டேன்!

     தாம்பரத்தில் டிக்கெட்டை வாங்கிவிட்டு, பிளாட்பாரத்தில் நடந்தேன். திடீரென்று ஒரு கம்பார்ட்மெண்டில் ஹோம்லி பிகர் ஒன்று உட்கார்ந்து இருந்தது. சரி, நமக்கு இன்னிக்கி போர் அடிக்காது, நல்லா சைட் அடிக்கலாம் என்று நினைத்து அதே கம்பார்ட்மெண்டில் ஏறினேன்!

     அப்போதுதான் அந்த பையன் என் கண்முன் தோன்றினான்!

     "slim fit jean" அணிந்திருந்தான், பச்சை நிற டீ ஷர்ட், ரீபோக் ஷூ, கழுத்தில் ஐ பாட் ஹெட் செட், டீ ஷர்டின் கழுத்து விளிம்பில் ஒரு கண்ணாடியை தொங்க விட்டபடி மிகவும் "கெத்து- ஆக " இருந்தான். பார்ப்பதற்கு ஒரு typical இன்ஜினியரிங் மாணவன் போல் தோற்றமளித்தான்.

     "ஆஹா, இவன் நமக்கு போட்டியாக இருப்பானோ!"

     நான் நினைத்தது சரியாக தான் இருந்தது! சரி, இதற்கும் மேல் இங்கு இருந்தாள் நான் டம்மி பீஸ் ஆகிவிடுவேன் என்று நினைத்துகொண்டு இருந்தேன்! அந்த இடத்தை விட்டு போகவும் மனமில்லாமல், அவன் போடும் சீனை காணவும் மனமில்லாமல் மதில் மேல் பூனையாக நின்று கொண்டு இருந்தேன்! அவன் அந்த பிகரிடம் சென்று,

     "எக்ஸ்கியூஸ் மீ, ஹாய் ஐ அம் கௌதம், மே ஐ நோ யுவர் நேம் ப்ளீஸ்?"

     அவள் அதற்கு ஏதோ சொன்னாள்! காதில் விழவில்லை, ஆனால் பல்பு வாங்கி இருந்தான்! ஈ என்று இளித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்!

     "பரம திருப்தியாக இருந்தது "

     "இங்கிருந்து போக வேண்டாம் என்று முடிவு எடுத்து, அங்கேயே உட்கார்ந்தேன்"

     "பல்பு" வாங்கிய கௌதம், நேராக என்னை நோக்கி வந்தான்
     எனக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தான்!
    
      "ஹாய் ஐ அம் கௌதம்"
      ஹாய், நான் ரவிசங்கர்.

     "இந்த slim fit jean போட்டாலே ஒரே கடுப்பு, ரொம்ப uncomfortableஆ இருக்கும், இருந்தாலும் என்னோட ஆளு இத தான் போடணும்னு சொல்லிட்டா... அதான் இத போட்டுட்டு இருக்கேன்!"

     "சரியான லூசு**** இருப்பானோ?"
(****- இந்த இடத்தில் உங்களுக்கு சரின்னு படற வார்த்தைய போட்டுக்கோங்க)

    நான், ஒன்னும் பேசவே இல்லை. கொஞ்சம் அறுவை பார்டி போல. பரவால்ல இது கூடவே மொக்க போட்டுட்டு போகலாம்னு நெனச்சேன்!

     என் வாழ்க்கைலே நான் எடுத்த மிகப்பெரிய தப்பான முடிவுகளில் இதுவும் ஒன்று.

     "அப்புறம், எந்த காலேஜ்?"  என்று கேட்டேன்!

     அவனும் சென்னையில் ஒரு கல்லூரியின் பெயரை சொன்னான்!
     (பொதுநலம் கருதி, கல்லூரியின்  பெயரை  வெளியிடவில்லை!)

     நானும் என்னுடைய கல்லூரியின் பெயரை சொல்லி, "அப்புறம், லைப் எல்லாம் எப்படி போகுது?" என்று கேட்டேன்! அவ்வுளவுதான், சனியன் சட்டை பையில் உட்கார்ந்தது!

(நிற்க, இதற்கும் மேல் படிக்க வேண்டாம்! அப்படி படித்தே தீருவேன் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல!)
    எங்க ரவி, லவ் பண்ணினாலும் பண்ணினேன், ரொம்ப அவஸ்தையா இருக்கு! ஏன் சொல்றேன்னா "என்னோட ஆளுக்கு புடிக்கற மாதிரி தான் டிரஸ் போடனும், எனக்கு புடிக்கற டிரஸ் எதுவும் போடக்கூடாது!" அப்புறம் தினமும் நாலு அஞ்சி தடவ கால் பண்ணி பேசனும், ரொம்ப கேர் எடுத்துக்கணும். இதெல்லாம் பாக்கும்போது ஏண்டா லவ் பண்ணினோம்னு தோணுது!

     இதுல, பாருங்க ரவி, போன தடவ அவள பாக்கும்போது என்னோட பிரெண்ட் ஒருத்தி எனக்கு மெசேஜ் அனுப்பிட்டு இருந்தா, அத பாத்ததும் அவளுக்கு கோவம் வந்துடிச்சி. ம்ம்ம், மொபைல்னு சொன்ன உடனே தான் இன்னொன்னு ஞாபகத்துக்கு வருது, என்னோட மொபைல்-ல சாப்ட்வேர் பிரச்சனனு நெனைக்கறேன், இங்க பாருங்களேன்.

     இது HTC மொபைல், ஸ்மார்ட் போன் வெல ரொம்ப அதிகம்! இதுக்கு முன்னாடி வேற ஒரு போன் வச்சி இருந்தேன், அது blackberry ! உங்களுக்கு blackberry தெரியும்ல ரவி? ஊர்ல டூ வீலர் ஆக்சிடெண்ட்ல அந்த மொபைல் உடஞ்சி போச்சு! என்ன ஆச்சுனா, என்னோட பல்சர் 220ல வேகமா போயிட்டு இருந்தேன், அந்த நேரம் பாத்து நான் பாஸ்ட் ட்ராக்  ரைடிங் க்ளாஸ் கூட போடல, கீழ ஸ்லிப் ஆகி, விழுந்து வண்டி எல்லாம் நொறுங்கி, கிட்டத்தட்ட 50ஆயிரம்  ரூபா லாஸ்!



                                                                "ஒய் பிளட், சேம் பிளட்"

     இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போனான் அந்த புண்ணியவான்!
யான் பெற்ற துன்பம், பெருக இவ்வையகம்! என நினைத்தால், அவன் கூறிய அனைத்தையும் சொல்லலாம். இதற்கும் மேல் உங்களை துன்பப்படுத்த மனமில்லாமல் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்! அவன் கூறிய அனைத்தையும் சொல்லலாம்னு தான் இருந்தேன். இருந்தாலும் அந்த அறுவைய மறுபடியும் கஷ்டப்பட்டு type பண்ணனுமான்னு நெனச்சி என்னோட முயற்சிய கைவிடறேன்!

     போகறதுக்கு முன்னாடி என்னோட செல்போன் நம்பர வாங்கி, மொக்கையான forward message அனுப்பி இப்ப வரைக்கும் இம்சிக்கிறான் என்பது கூடுதல் கொசுறு செய்தி!

எனவே, மைத்துனர்களே தயவு செய்து நொந்து நூடுல்ஸ் ஆகி சொல்கிறேன், (என்னத்த சொல்றது, ஒன்னும் மெசேஜ் எல்லாம் சொல்லப்போறது இல்லீங்க. எல்லாம் அவனவன் நேரம்!) ஆனா ஒன்னு மட்டும் confirmங்க, அந்த லூசு**** வேற யாரும் இல்ல, நாந்தான்!

"ஒன்பது நிமிடத்தில் காதல்"

     அது வேற ஒன்னும் இல்லீங்க, காதல் கதையாம்,  கழுத எழுதிட்டு போவோமே. ஏன் சொல்றேன்னா, இந்த காதல் கதைகள்லாம் எனக்கு எழுதி முன்னபின்ன பழக்கம் இல்ல, காதல்ல அனுபவமும் இல்ல, இருந்தாலும் காதல் கதைகளை எழுத வேண்டும் என்று  ஒரு நப்பாசை!
ஆங், அப்புறம்,  இந்த கதையை கசிந்து உருகி எல்லாம் எழுதல, வழக்கமான  கேளியோடையும், கிண்டலோடையும் தான் எழுதி இருக்கேன்!

    பில்ட் அப் போதும்னு நெனைக்கறேன், சரி வாங்க கதைக்கு போகலாம்!

     கதையை எழுதி முடித்துவிட்டு,  என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தபோது, என் தலைக்கு மேல் ஒரு பல்பு எரிந்து  சூரமொக்கையான தலைப்பு வெளியிட உதவியது.

_________________________________________________________________________________



      "ஒன்பது நிமிடத்தில் காதல்"

     ட்ரீம் லொகேஷன்: ஊட்டி;
     பேக்ரவுண்டு பாடல்: நினைவோ ஒரு பறவை;
     ஹீரோ- அகில்;
     ஹீரோயின்- ஒரு தேவதை.
     இருவரும் ஸ்லோ மோஷனில் ஒருவரை நோக்கி ஒருவர் ஓடி வருகிறார்கள். 


ட்ட்ட்ரீரீரீரீரீரீரீரீரீரீரீங்ங்ங்ங்!

     என அலாரம் அடித்ததால் கனவு கலைய,  தனது போர்வையை உதறித்தள்ளி, பழிவாங்கிய  அலாரத்தின் தலையில் ஒருதட்டு தட்டினான் அகில். அலாரம் அவனுக்கு கட்டுப்பட்டு தனதுவாயை பொத்திக்கொண்டது! ம்ம்ம் என்று முனகியவாரே,  மீண்டும் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டான்! மணி சரியாக ஆறு

     இந்த அலாரத்தை off செய்து மீண்டும் தூங்குவதே தனி சுகம்! அந்த சுகத்தை அனுபவிக்க அவன் மட்டும் விதிவிலக்கா என்ன?

     எவ்வுளவோ தூங்க முயன்றும் தேவதையுடன் அவனால் மீண்டும் அந்த லொகேஷனுக்கு செல்ல முடியவில்லை

     அகிலைப்பற்றி சொல்வதற்கு பெருசா ஒண்ணுமில்லை,  வயது 24, நல்ல உயரம், ஸ்மார்ட்டாக இருப்பான்.   BSC., படித்திருக்கிறான், சென்னையில் ஒரு கம்பெனியில் 6000திற்கு வேலை செய்கிறான், இதுவரை யாரையும் காதலித்தது இல்லை! ஒரு வாரத்திற்கு முன் தான் அவனது நெருங்கிய நண்பன் யாரோ ஒரு பெண்ணை, உருக உருக  காதலித்து திருமணம் செய்துகொண்டான்.அவன் திருமணத்திற்கு gift வாங்கையில் தான், அவனுக்கு முதல் முதலாக தேவதை தரிசனம் கிடைத்தது!


     இனி அந்த தேவதையை பற்றி: சென்னையில் ஒரு பிரபலமான பரிசுப்பொருட்கள் கடையில் supervisor-ஆக  வேலை செய்கிறாள். வயது 21 இருக்கலாம். சூப்பர் பிகர் எல்லாம் இல்லை, சுமாரான அழகு. அகிலை பக்கத்தில் வைத்து பார்த்தால் இருவரும் நல்ல ஜோடியாக இருப்பார்கள்! முதல் சந்திப்பு அன்றே, இவளும் அவனை கண்டு ஏக்கமுற்றாள். ஆனால் இருவரும் பேசவில்லை.

     போர்வையை உதறித்தள்ளி, கட்டிலை விட்டு துள்ளி எழுந்தான், நேராக சென்று காலெண்டரில் 11/11/1982 என்ற தேதியை கிழித்தான். தனது தனுசு ராசிக்கு என்ன பலன் என்று பார்த்ததில், "காதல்" என்று அச்சிடப்பட்டு இருந்தது!

     சனிக்கிழமை. அலுவலகம் விடுமுறை!

     குளித்து முடித்து, சிற்றுண்டியை முடித்துவிட்டு இன்று தனது "கனவு தேவதையிடம்" காதலை சொல்லாமல் தூங்குவது இல்லை என சபதம் மேற்கொண்டான்! காலை பத்து மணிக்கு வெளியே செல்லலாம் என்று நினைத்து தனது பஜாஜ் chetak வண்டியை வெளியே எடுத்தான்.

     கடந்த சில நாட்களாகவே காதல் படங்களையும், கவிதைகளையும், பாடல்களையும் ரசிக்க ஆரம்பித்து இருந்தான்! அன்று நண்பனின் கல்யாணத்திற்கு பரிசு வாங்குகையில், அந்த பரிசு பொருட்கள் கடையின் முதலாளி, "சாருக்கு மேரேஜ் கிப்ட்ஸ் காட்டும்மா" என்றதும்,  அந்த தேவதை அவனை ஏறிட்டது.
அந்த கனம் தான், அவன் நெஞ்சில் லார்வா முட்டை போட்டது! இன்று பட்டாம்பூச்சி டெலிவரி ஆகி,  வெளியே வந்து சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறது. சென்னையின் தெருக்களினூடே வண்டியை செலுத்தியவாறே 'ஈ' என்று பல்லை இளித்துக்கொண்டு, காதலியை காணப்போகிறோம் என்று களிப்புற்றான்!

     நேராக கடைக்கு வாசலில் வண்டியை பார்க் செய்து விட்டு, உள்ளே நுழைய முற்பட்டான்! வாசலுக்கு பக்கத்தில் செல்ல செல்ல அவனுக்கு இதயத்துடிப்பு அதிகமானது. நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டே கடைக்கு உள்ளே சென்றான். கடையில் கடிகாரம் மணி 11 என இசைத்து அறிவித்தது. இவன் வருவதை கவனித்த அந்த தேவதை, நேராக தனது இடத்திற்கு கொலுசிட்ட கால்களின் உதவியால் ஓடினாள்!

     வெள்ளை நிற சுடிதார், அதிகம் மேக்கப் இல்லாத முகம், கண்ணில் மையிட்டிருந்தாள், இதழில் மெலிதாக ரோஜா நிற லிப்ஸ்டிக்,  புருவத்திற்கு மத்தியில் கால் இன்ச் குங்குமக்கீற்று, இவை அனைத்தும் அவளை சுமாரான பிகர் அந்தஸ்திலிருந்து சூப்பர் பிகர் அந்தஸ்திற்கு உயர்த்தியது.(ஆயிரம்தான் கதைக்கு நான் ஆசிரியராக இருந்தாலும், மாற்றான் காதலியை பிகர் என்று வர்ணிப்பது தவறு. அகில் என்னை மன்னிப்பானாக!)  

         அவளை கண்டவுடன், அகிலனுக்கு காலையில் விட்டுப்போன கனவு மீண்டும் மனக்கண்ணில் தோன்றியது. அந்த தேவதையை கண்டவுடன் இவனால் ஒன்றும் பேச முடியவில்லை, ஸ்தம்பித்து போனான்! தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கல்யானப்பரிசுகளை வாங்கும் இடத்திற்கு சென்றான்.



      அவளுக்கு அருகில் சென்றான், இருவருக்கும் இடையில் கண்ணாடிப்பேழை ஒன்று குறுக்க இருந்தது. அந்த தேவதை இவன் வருவதை கண்டு கொள்ளாமல் இருப்பது போல், தலை கீழே குனிந்து நின்றிருந்தது! இவன் தனது தொண்டையை கனைத்துக்கொண்டு, சற்று ஜெர்க் விட்டான்!

மெதுவாக தனது தலையை உயர்த்தி பார்த்தாள். அப்போது
   "அவளும் நோக்கினாள், அண்ணலும் நோக்கினார்"   
    (கம்பர் இந்த வரிகளுக்கு copyright வாங்கவில்லை என நம்புகிறேன்!)


    அவள் சுதாரித்துக்கொண்டு, "என்ன வேணும் சார்?" என்றாள். இவனோ அரை இன்ச் வாயை திறந்து, ஒரு சிலையை போலவே நின்றுகொண்டு இருந்தான். அந்த தேவதை, தனது இரு கைகளை கட்டிக்கொண்டு, புருவத்தை உயர்த்தி  "ஹலோ சார்?"  என  வினவினாள். இதற்கும் அவனிடத்தில் பதில் இல்லை.

    அவளின் அழகில் சொக்கி, அவன் மனம் தவிடுபொடியானதை, அவனால் உணரமுடிந்தது.

     பின்  அந்த தேவதை தன் தலையை லேசாக வலப்பக்கம் சாய்த்து, பின் இதழோரம் புன்னகைத்து. கைகளை அவன் முகத்திற்கு முன் வலப்புறமும், இடப்புறமும்
ஆட்டி "சார், என்ன வேணும்னு சொல்லுங்க!" என கேட்டது.

     எங்கேயோ நயாகரா நீர்வீழ்ச்சிக்கும், தாஜ்மகாலுக்கும், பாரிசின் ஈபில் டவருக்கும் பறந்து சென்ற தன் மனதை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி கடைக்குள் கொண்டு வந்தான்!
இதற்கும் மேல் அசடு வழிந்தால், நல்லதல்ல என்று நினைத்தவனாய்,
" அ..., ம்ம்..., மி, மிஸ், உங்க பேரு என்ன?" என்றான். அதற்கு அந்த தேவதை "என்ன மிஸ்டர், என்னோட பெயர கேட்டு தெரிஞ்சுக்கவா வந்தீங்க, அப்ப gift வாங்க வரலையா?" என சிரித்துக்கொண்டே கேட்டது!

     "அப்படி இல்ல, போன தடவ வந்த போதே உங்கள பாத்தேன், ஆனா பேச முடியல! அதான்..." என்று அசடு வழிந்தான்! "சரி என்னோட பேரு திவ்யா" என சொல்ல அவன் அகில்திவ்யா என தன் மனதிற்குள் பெயரை இணைத்து  சொல்லிக்கொண்டான். உங்க பேர சொல்ல மாட்டீங்களா? அம், அ... என்னோட பேரு அகிலன், சரி எனக்கு ஒரு gift வேண்டும்! என சொன்னான்.

     "யாருக்கு?"
 
     "உங்களுக்கு தான்!"

     "என்ன?"

    "இல்ல, உங்கள மாதிரி ஒரு அழகான பொண்ணுக்கு தான்!"

    "யாரு? உங்களோட காதலியா?"

    "இல்ல, இது வரைக்கும் அவங்க என்ன காதலிக்கல, இனிமே காதலிப்பாங்கனு நம்பறேன்! "

     "ஒன்னும் புரியலையே"

    "எனக்கே ஒன்னும் புரியல, என்ன நடக்குதுன்னு தெரியல!"

     இதற்குள் திவ்யா ஒரு giftஐ எடுத்து "இது நல்லா இருக்கானு பாருங்க" என்றாள்.

      அவன், அந்த giftஐ காணாமலே, அவள் முகத்தை பார்த்தபடியே "நல்லா இருக்கு"
என்று சொன்னான். என்ன அகிலன், பாக்காமலேயே நல்லா இருக்குனு சொல்றீங்க?

     "அழகு தேவதையின் கைப்பட்டால் அத்தனையும் அழகு தானே!" என சொல்ல அவள் கன்னங்களில் பிங்க் நிறம் ஒட்டிக்கொண்டது. சரி அகிலன், என்ன பண்றீங்க? என கேட்டதற்கு, தனது கம்பெனி பெயரையும், தான் வகிக்கின்ற போஸ்டையும் பற்றி சொன்னான்! அப்படியே அந்த gift ஐயும் பேக் பண்ண சொன்னான்!

     "உங்களை, மறுபடியும் சந்திக்கும் நாளை எதிர்நோக்குகிறேன் திவ்யா!"

     "அது என்னவோ தெரியல திவ்யா, உங்க கிட்ட இதுவரைக்கும் ஒரு நூறு வார்த்தை கூட பேசி இருக்க மாட்டேன்! ஆனா, ஏதோ பல கோடி வார்த்தைகள் பேசி, பேசுவதற்கு வேறு வார்த்தையே இல்லாமல் போல் பிரமையா இருக்கு"
     இது வரைக்கும் உங்ககூட ஒரு பத்து நிமிஷம் தான் இருந்து இருப்பேன்! ஆனா, பல நூறு வருஷம் உங்களோட இருந்தது மாதிரியும் வியப்பா இருக்கு!"

     "எனக்கும் தான், அகிலன்" என நாணத்துடன் கூறி கீழே குனிந்து கொண்டாள்!

     மெலிதாக புன்னகைத்து, "யெஸ்", என தன் மனதிற்குள் சொல்லிக்கொண்டான்! அப்படினா இன்னிக்கி ஆறு மணிக்கு கிரீன் பார்க்கில் உங்களுக்காக காத்துட்டு இருப்பேன்.
என்ன ஏமாத்த மாட்டீங்கன்னு நம்பறேன்.

     கீழே தலை குனிந்தவள், அப்படியே இருந்தாள்!

     "மௌனம் சம்மதத்துக்கு அறிகுறியா?"

     "உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்! இப்ப இல்ல, ஆறு மணிக்கு. மறக்காம வந்துடுங்க "

    "சரி, இன்னிக்கு ஈவ்னிங் 6 மணிக்கு உங்கள எதிர்பார்பேன் "     

     இதற்கும் பதில் இல்லை, மாறாக மௌனமே பதிலாக வந்தது. அகிலனும் வாங்கிய பொருளுக்கு பணம் கொடுத்துவிட்டு, வெளியே செல்ல ஆயத்தமானான்! பாதி வெளியே  சென்றவன், தனது தலையை மட்டும் எட்டி உள்ளே பார்த்தான், இவன் திடீரென்று பார்த்ததை சற்றும் எதிர்பாராத அவள், கீழே ஒளிந்து கொண்டாள். 
"என்ன ஏமாத்தமாட்டீங்கல்ல?"

     இதற்கு மட்டும் இல்லை என்று தலை ஆட்டினாள்!
     இவன் அவளை கண்டு சிரிக்க, அவளும் இவனைக்கண்டு வெட்கி தலை குனிந்தாள்! தனது கைக்கடிகாரத்தில் மணியை பார்த்தான்- 11 மணி 9 நிமிடம் ஆகி இருந்தது...

    



     சாயுங்காலம் ஆறு மணி.

     கிரீன் பார்க், அரை இருட்டு வெளிச்சத்தில் திவ்யா ஒரு தேவதை போல இருந்தாள்.
ரம்மியமான மாலைப்பொழுது. இருவரும் பார்க்கில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்தனர். அவளின் கைகளை தனது கையோடு அணைத்து, இறுக பிடித்துக்கொண்டான்.

     "ஐ லவ் யூ திவ்யா"

     இப்பொழுதும் அவள் கன்னங்களில் பிங்க் கலர் ஒட்டிக்கொண்டதை அவன் கvவனிக்க தவறவில்லை! அவளும் பதிலுக்கு "ஐ டூ லவ் யூ அகில்" என்று சொன்னாள்.

     அவன் அவளுடைய கன்னத்தை தனது இரு கைகளால் பிடித்து, அவள் உதட்டை தனது உதட்டருகே கொண்டு வந்தான்!


     இதன் பிறகு உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்!

 

இக்கரைக்கு அக்கரை பச்சை!

செஞ்சட்டை அணியலாமா
என்று யோசித்தேன்,
-புரட்ச்சிக்காரன் என்று நிரந்திர
பட்டம் அளித்து விட்டால்?

கருஞ்சட்டை அணியலாமா
என்று யோசித்தேன்,
-நாத்திகனென்றும், திராவிட
வெறியனென்றும் விளித்துவிட்டால்?

அட, கதர் சட்டயாவது
அணியலாமா என்று யோசித்தேன்,
-சாக்கடையில் போய் விழுகிறானே
என்று சாடி விட்டால்?

அரை நிமிட, யோசனைக்கு பிறகு,
formal shirt அணிந்து கொண்டு,
பொறியியல் கல்லூரிக்கு
சென்று விட்டேன்!

இப்போது புரிந்தது,
formal சட்டைக்கு,
செஞ்சட்டையும், கருஞ்சட்டையும்,
கதர்சட்டையும்
எவ்வுளவோ மேல் என்று!

இக்கரைக்கு அக்கரை பச்சை!

 

ஐய, இன்ன பாக்ற?

 ________________________________________________________________________________


     "ஹேய், ஐய, த... இந்த, ஹைஹைஹை" என்று மாட்டையும் கன்றையும் ஓட்டிக்கொண்டே வந்தான் மனோஜ், இல்லை கார்த்தி, இல்லை இல்லை 'கந்தசாமி'.

(மன்னிக்கவும், கிராமத்து கதைகளுக்கு இது போன்ற பெயர் வைத்தால் தான் சரிபட்டு வரும், அதான் இந்த குழப்பம்!) 

     பள்ளிக்கூடத்தல பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கான், மேல படிக்க விருப்பமில்லாமல் அப்பாவோட விவசாயம் பண்ணிட்டு இருக்கான். தனக்கு எல்லா விஷயங்களும் தெரியும் என்பது போல் 'சீன்' போடுவான் அல்லது 'பாவ்லா' காட்டுவான், அல்லது வேறு எதுவேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள்! நான் சொல்ல வந்தது புரிந்தால் சரி!

     மாலை ஐந்து மணி:

     தாயையும் சேயையும், மரத்தில் கட்டிவிட்டு 'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா' என்றவாறே வீட்டினுள் நுழைந்தான்.
கை கால்களை கழுவி விட்டு, 'யம்மோவ், டீயப்போடு' என்று தன அம்மாவிற்கு கட்டளையிட்டான். பதிலுக்கு 'இன்னது, டீப்போட்டலம் ஆயிப்போச்சு, பன்னிக்குட்டி கடைக்கு போய் வாங்கியா ' என்று சொன்னாள். மேலும் 'எண்ணயும் ஆயிப்போச்சு, போய் ரேஷன் கடையில வாங்கியா' என்று கொசுறு செய்தியும் வந்தது!

    மாடத்திலிருந்து தனது சைனா செல்போனை எடுத்து, ஏதோ ஒரு இளையராஜா பாடலை ஒலிக்கச்செய்தான். அது பெரும் சப்தத்துடன் "அலற" தொடங்கியது. அந்த அலறலுக்கு தனது மேல் பாக்கெட்டில் அடைக்கலம் கொடுத்து தெரு முனைக்கு வந்தான்! தெரு முனையில் ஒரு டீக்கடை இருந்தது, அதற்கு அந்த கிராம வாசிகள் வைத்த பெயர் "பன்னிக்குட்டி கடை".

     ஒரு காலத்தில் அந்த கடையின் முதலாளி பன்றிக்குட்டிகளை  மேய்த்து கொண்டிருந்தாராம், எனவே அம்மக்கள் அக்கடைக்கு வைத்த காரண இடுகுறிப்பெயர் அது! கடைக்கு வெளியில் கீற்றுகொட்டகை வேயப்பட்டு இருந்தது. தனது இடது கையை சட்டை பாக்கெட்டின் மேலே வைத்தபடி குனிந்து கொட்டகையின் உள்ளே சென்றான். செல்போனை எடுத்து இளையராஜாவின் கதறலுக்கு சற்று நேரம் இளைப்பாறுதல் அளித்துவிட்டு,

     "டே முருகா, ஒரு டீப்போட்டலம் குட்றா" என்றான். அந்த முருகன் செவப்பு பொட்டலமா, நீல பொட்டலமா என்று கேட்டான். சிகப்பு என்றால் த்ரீ ரோசெஸ், நீலம் என்றால் டாப் ஸ்டார். அதற்கு கந்தசாமி,  "செவப்பு பொட்டலம்" என்று கூறி ஏதோ தன்னால் இயன்ற லாபத்தை 'த்ரீ ரோசஸ்' கம்பனிக்கு   கொடுத்துவிட்டு, அங்கே இருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்தான்.

     அந்த பெஞ்சில் ஒரு கால் நிற்க துப்பில்லாமல்,  ஒரு செங்கல்லில் மீது தனது பாரத்தை வைத்தபடி ஊசலாடிக்கொண்டு இருந்தது. எப்போது வேண்டுமானாலும் விழலாம்.

     எதிர் பெஞ்சில் ராமராஜன் சட்டை, ராஜ்கிரண் கைலி ஆகியவற்றை உடுத்திய நான்கு பேர் கொண்ட குழு செய்தித்தாள் படித்துக்கொண்டு இருந்தனர். அதில் ஒரு ஒல்லி நபர், "யோவ் மணி, இங்க பாருய்யா, கம்போடியாவுல ஏதோ பெட்ரோல் ஏத்திட்டு வந்த லாரி கவுந்துட்டுதாம், வழிஞ்சி ஓடற பெட்ரோல புடிக்க ஊர் ஜனம் எல்லாம் போனதுங்களாம், திடீர்னு தீப்பத்திக்கிட்டு அந்த லாரி வெடிச்சதுல 70க்கும் மேற்பட்ட ஜனம் செத்துபோச்சாம். ம்ம்ச், படிக்கவே பாவமா இருக்குப்பா" என்று ஐந்து மணி செய்தியை வாசித்து முடித்தார்.

     "ஹுக்கூம், இன்னத்த பாவம்? அதுங்களுக்கு புத்தி கெட்டுபோய், கேவலம் பெட்ரோலுக்கு ஆசைப்பட்டு போச்சிங்க, அதான் ஒரேதடியா போய் சேந்ததுங்க"- இது மற்றொரு நபர்.

     "அதாவதுண்ணே, டேங்கர் லாரிக்கு பர்மிட் கொடுக்கும்போதே அது நெல்லா ஸ்ட்றாங்கக்குதா, நெல்லா ஒழைக்குதான்னு பாத்துதான் கொடுக்கணும்... இவனுங்க அதெல்லாம் பாக்காம் உட்ட, இப்டிதான் ஆவும்!" என்று கந்தசாமி சொன்னான்! இப்போது நால்வரின் பார்வையும் கந்தசாமியின் மீது இருந்தது.

     "அபிடியா?"- இது நால்வரில் ஒரு குண்டு மனிதர். "ஆமாண்ணே! அது மட்டும் இல்ல, பெட்ரோல் வண்டியேல்லாம் மெயின் ரோடு வழியா எடுத்துனு போகமாட்டாணுவ, கிராமத்து ரோட்டு வழியாதான் ஓட்டிட்டு போனும், எல்லாம் ஒரு சேப்டிக்குதான் " என்று தன வாய்க்கு வந்ததை எடுத்து விட்டான்!

     "இல்லியே, நேத்துகூட நம்ம பைபாஸ்-ல பெட்ரோல் வண்டிய பாதேனே!" என்று அந்த ஒல்லி நபர் சொன்னார். "என்னது, ஆங், அதுவா... அது வந்து காலி வண்டின்னே, ரிட்டன் போகும்போது மெயின் ரோட்ல போலாம்ல". அதற்கு அந்த குழு ஒரு சேர தலையாட்டியது.

     அது மட்டும் இல்ல, இது மாதிரி மேட்டர் நடந்தா மொதல்ல போலிசுக்கு போன் பண்ணி தகவல் சொல்லணும், அப்புறம் ஆஸ்பத்திரிக்கு போன் பண்ணி ஆம்புலன்ச வர சொல்லணும். போலீஸ் வர்ற வரைக்கும் யாரும் பக்கத்துல போகக்கூடாது என்று ஏகப்பட்ட பிட்டுகளை போட்டான்!

     "இதுல இம்மா மேட்டர்கிதாடா?" என்று மற்றொரு நபர் கேட்டார். "ஆமாமா, டேய் முருகா பொட்டலத்த குட்றா!" என்ற கந்தசாமி அதை வாங்கியவாறே "நம்ம ஊர்லதான் சாமா வாங்கினா காசு கொடுக்கறோம், ஆனா பாரின்லலாம் கிரெடிட் கார்டுதான். அத்த வச்சிகினு இன்ன பொருள் ஓனுனாலும் வாங்கலாம்" என்றான்.

     "ஓஹோ, அதான் வெளிநாட்லலாம் பணக்காரனுங்களாகிறானுங்க, இல்ல?" என்றான் அந்த குண்டு மனிதர். அதற்கு 'ஆமாமாம்' என்று சொன்னான் நம் ஹீரோ.

     இதற்கிடையில், குண்டு மனிதரின் எட்டு வயது மகன், "யப்போவ், யப்போவ், யப்போவ்...!" என்று கூப்பிட்டுக்கொண்டே ஓடிவந்தான்.

     "தேய், இன்யாடா?" என்றார். "யப்பா, மோட்டுத்தெருவாண்ட எண்ண லாரி கவுந்துடிச்சிப்பா, ஒன்ன அம்மா சீக்ரமா போய் எண்ண புடிக்க சொல்லிச்சி, பாமாயிலாம், வாப்பா போலாம்" என்று படபடவென்று சொல்லினான் அச்சிறுவன். "டேய், அங்கல்லாம் போவக்கூடாது, ஒழுங்கா வூட்டுக்கு போடா" என்று சொன்னார். "யப்பா, அல்லாரும் போறாங்கப்பா" என்று கூறிய சிறுவனை, "வூட்டுக்கு போடான்னா, நின்னு பேசினேகிறியே" என்று அதட்டினார் மிஸ்டர் குண்டு.

     "கந்தசாமி, சீக்ரம் போய், டேஷனுக்கு போன் பண்ணுப்பா" என்று அந்த குண்டு மனிதர் சொல்வதுற்குள் படாரென்று எழுந்து வேகமாக ஓடினான். அவன் எழுந்த அதிர்வில் செங்கல்லிடமிருந்து விடுதலை வாங்கிக்கொண்டது அந்த மர பெஞ்சின் கால்! அது 'டொம்' என்று பக்கத்தில் இருந்த மூங்கில் கழி மீது சாய்ந்தது. அந்த மூங்கில் கழியும் பார தாங்காமல் சாயவே, அந்த கீற்றுக்கொட்டகை 'டமார்' என்று அவர்கள் மீது விழுந்தது.

     வேகமாக வீட்டினுள் நுழைந்து கந்தசாமி எதையோ எடுத்துக்கொண்டு பின்வாசல் வழியே ஓடினான். அவனின் அம்மா, " டீப்போட்டலம் எங்கடா" என்று கேட்டதற்கு பதிலேதும் கூறாமல் மேட்டு தெருவை நோக்கி ஓடினான்! சிறிது நேரத்தில் அந்த இடத்தை அடைந்துவிட்டான். இதற்குள் அங்கு ஒரு ஏழெட்டுபேர் முண்டியடித்துக்கொண்டு, வழிகின்ற எண்ணெயை பாத்திரத்தில் பிடித்துக்கொண்டு இருந்தனர். அந்த காட்சியை கண்டவுடன், இவனுக்கு கோபம் வந்துவிட்டது. அவர்களை நோக்கி வேகமாக ஓடினான்.

     "ஏய், தள்ளு தள்ளு, யாரும் இங்க நிக்கக்கூடாது, போ போ போ..." என்று அனைவரையும் விரட்டினான். அனைவரும் இவன் வருவதை பார்த்ததும் நகர்ந்துவிட்டனர். லாரியிடம் சென்றவுடன், தான் கொண்டுவந்திருந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு எண்ணெயை பிடித்தான். இவனை பின்தொடர்ந்து அனைவரும் நின்றிருந்தனர்.

     இரண்டு நிமிடத்தில் அந்த குண்டு மனிதர் நெற்றில் கை வைத்து தேய்த்தபடியே, லாரியிடம் வந்தார். அங்கு முதல் ஆளாய் நின்று கந்தசாமி எண்ணெய் பிடிப்பதை பார்த்தார். அவனருகில் சென்று அவன் முகத்தை பார்த்தார்.

     இவர் வந்ததை கவனித்த கந்தசாமி, "ஐய, இன்ன பாக்ற?" என்றான்.

கோக்குமாக்கு

         சில விஷயங்கள் தனிப்பட்ட முறையில் நமக்கு பிடிக்காவிட்டாலும், நம்மை அவ்வுளவாக ஈர்க்காவிட்டாலும், சில சூழ்நிலைகளில் நமக்கு அவற்றை பிடிக்கும் என்று பச்சையாக இவ்வுலகிற்கு காட்டவேண்டி உள்ளது. இப்படி அந்த பொய்யான விஷயத்தை சமுதாயத்தில் வேறுபடுத்தி காட்டியே, பின் ஒரு நாளில் அந்த பிடிக்காத விஷயம் வேறு வழியே இல்லாமல் நமக்கு பிடித்தும் பொய் விடுகிறது என்பதே நிதர்சனம்!

          மனித மூளை என்பது இயற்கையாகவே முரண்பாடுகளை நிறைய விரும்பும்! ஏதாவது ஒரு பருப்பொருளில் வித்தியாசமோ, முரணோ இருக்குமாயின் மனித மனமானது அதன்பால் ஈர்க்கப்படும்! அது எவ்வாறெனில், ஒரு உதாரணம்:

       நாம் காண்கின்ற சினிமாவில் realisticஆன விஷயங்கள் இருந்தால் நமக்கு பிடிக்கும். சினிமாத்தனமான படங்களை  பார்த்து பார்த்து அலுத்து விட்டது நமக்கு! ஏதாவது ஏடாகூடம் நமக்கு அவசியம் தேவைப்படுகிறது!

       அதுபோல், real வாழ்கையில் cinematic விஷயங்கள் நடந்தால் நமக்கு பிடிக்கும்! கண்டிப்பாக வாழ்வில் சற்று வித்யாசமான, கோக்குமாக்கான  சம்பவங்கள் இடம்பெற்றால் தான் thrillஆக இருக்கும்!


        நிற்க! ஒரு நிமிஷம், இப்ப நான் என்ன சொல்ல வர்ரேன்?  நான் பாட்டுக்கு எதேதோ பேசிட்டே போறேன்! சரி அத விடுங்க, அடுத்த சிறுகதைய போஸ்ட் பண்றதுக்கு ஒரு ரெண்டு நாள் ஆகும். அத சொல்றதுக்குதான் வந்தேன்.

        அது என்னமோ தெரியலீங்க, பேனாவ கையில புடிச்சா அப்டியே நாங்களும் பெரிய சிந்தனையாளர்னு தோணுது... தப்பா  நெனச்சுக்காதீங்க,  குறைத்துக்கொள்கிறேன்!!!

நிதர்சனம்

____________________________________________________________________________________________________


"அப்துல் கலாம் சொல்வதில்தான்  நியாயம் இருக்கிறது!!!"
என்னடா இவன் அப்துல் கலாமை பற்றி இந்த டயலாக்  சொல்கிறானே என்று குழம்பி போகாதீர்கள். இதை படித்து முடிக்கையில், உங்களுக்கு புரியும்!!!

மாலை நேரம், தாம்பரம் இரயில் நிலையம்.

சகித்துக்கொள்ளும்படியான வெயில், அவசர அவசரமாக விழுப்புரத்திற்கு டிக்கெட் எடுத்து விட்டு நேராக ஒன்பதாம் நம்பர் பிளாட்பாரத்திற்கு விரைந்தேன்!!!

ஒலிப்பெருக்கியில் அறிவிப்புகளை தெரிவிக்கும் அந்த பெண்ணின் குரல் என் செவிகளில் பாட்டு பாடுவது போல் திரும்ப திரும்ப ஒலித்துகொண்டிருந்தது!!! பற்றாக்குறைக்கு, அவளோடு நானும் சேர்ந்து அறிவிப்பை ராகத்தோடு வாசித்துக்கொண்டிருந்தேன். இரண்டு வருடங்களாக ஒரே இரயிலில் பயணம் செய்வதால் எனக்கு ஏற்பட்ட சங்கீத ஞானம் அது!!!

பத்து ரூபாய்க்கு ஒரு lays பாக்கெட், ஒரு கப் டீ இவற்றை வாங்கிக்கொண்டு ஏதோ ஒரு கம்பார்ட்மெண்டில் ஏறினேன். நான் உட்கார்ந்த இருக்கையில் நடுத்தர வயது உள்ள இரு
நபர்கள் வந்து உட்கார்ந்தனர். பார்த்த மாத்திரத்தில் இருவரும் பொறுப்பான அரசு அதிகாரிகள் என்று தெரிந்தது. நிறைய பேசிக்கொண்டே வந்தனர். (கவனிக்கவும், பொறுப்பான அரசு அதிகாரிகள் என்ற உடனே, வேறு எதுவும் கற்பனை செய்ய வேண்டாம்...)


சற்று நேரத்தில் இரயில் கிளம்பியது, நானும் lays பாக்கெட்டை பிரிக்க ஆயத்தமானேன். இதற்குள் அந்த இரு அரசாங்க ஆசாமிகளின் பேச்சு நம் நாட்டின் மீதும், அரசியல்வாதிகளின் மீதும் சென்றது..


அரசாங்க ஆசாமி 1: நம்ம நாட்ட கெடுக்கறதே  இந்த அரசியல்வாதிங்கதான். அவனுங்கள சொல்லணும். நல்லா முன்னேர்ற நம்ம நாட லஞ்சத்துக்கு அடிமைபடுத்தி
நாசமாகிட்டனுங்க.

அரசாங்க ஆசாமி 2: "அரசியலுக்கு வந்து நாட்ட முன்னேத்தராங்களோ இல்லியோ, ஒரு தடவஆட்சிக்கு வந்துட்டா பணத்த கொள்ளைஅடிக்காம போக மாட்டானுங்க"

அரசாங்க ஆசாமி 1: "நம்ம நாட்ல தான் இப்படி எல்லாம்.. போன வருஷம் சிங்கபூர்  போயிருந்தேன்ல,ப்பா  ஊர் என்னமா இருக்கு!!! அரசியல்வாதிங்க எல்லாம்  நாட்டுக்கு என்னமா உழைக்கறாங்க! ஊரே  அவ்ளோ சுத்தமா இருக்குப்பா!" என்று பேசிக்கொண்டே தன் கையில் இருந்த  டீ கப்பை கீழே போட்டார், அதில் சற்று டீ மீதம் இருந்ததால் கீழே விழுந்ததும் டீ சிதறிவிட்டது!


இவர்கள் சொல்வதில் நியாயம் உள்ளது என்று மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டேன். இதற்குள் lays பாகேட்டும் தீர்ந்து போகவே, அதை  சீட்டிற்கு அடியில் போட்டு விட்டேன்!


சற்று நேரத்தில், சமோசா விற்பவன் தன்னுடைய கட்டை குரலினால் மேஜர் சுந்தரராஜன் போன்று  "சமோஸ் சமோஸ்"  என்று விற்றுக்கொண்டு வந்தான். அவனிடம் பத்து ரூபாய் கொடுத்து நாலு சமோசா வாங்கினேன். அவன் அதை லாவகமாக ஒரு பேப்பரில் மடித்து எனக்கு கொடுத்தான். பத்து நிமிடத்தில் செங்கல்பட்டு வந்தது, சமோசா அதற்குள்  காலியாகிவிட்டது. மடித்து கொடுத்த பேப்பரில் விரல்களை துடைத்தேன்.


சுண்டல், கடலை போன்ற வஸ்துக்களை வாங்கும்போது இலவச இணைப்பாக வருகின்ற அந்த பிட்டு பேப்பரை படிப்பது  எனக்கு அலாதி இன்பம் தரக்கூடியது. அது குங்குமமோ, ஆனந்த விகடனோ, அல்லது மூன்றாம் கிளாஸ் படிக்கும் சிறுவர்களின் நோட்டு புத்தகமோ... படித்து விட்டுதான் கீழே போடுவது!!!


அந்த வகையில், இன்று எனக்கு மேஜர் சுந்தரராஜன் கொடுத்தது ஒரு செய்தித்தாள்! அது அப்துல் கலாம் அவர்கள் எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி! அது,

"நம் நாடு ஒழுங்காக இல்லை, இத்தனை வளங்கள் இருந்தும் இன்னும் ஏழை நாடாக தானே உள்ளோம். நாட்டை இந்த நிலைமைக்கு ஆக்கியது அரசியல்வாதிகள்தான் என்று நீங்கள் சொல்லாதீர்கள்!

சிங்கபூருக்கு போகிறீர்கள், சிங்கபூர் விமான நிலையத்தில் இறங்கிய உடன் உங்களில் பலபேர் சிறந்த மனிதர்களாக மாறிவிடுகிறீர்கள். ஒரு துண்டு பேப்பரை கூட தெருக்களில் போடுவது இல்லை,  கண்ட இடத்தில எச்சில் துப்புவது இல்லை, சுவற்றில் சிறுநீர் கழிப்பதும் இல்லை.

சிங்கப்பூரில் மட்டும் தான் நீங்கள் சிறந்த மனிதனாக வாழ்வீர்களா? ஏன் இந்தியாவில் மட்டும் இப்படி?"

என்று எழுதி இருந்தது! இதை படித்து முடித்த உடனே, அந்த அரசாங்க ஆசாமி 1: கிராபிக்ஸ்-இல் என் மூளையில்   தோன்றி, சிங்கப்பூரில் எப்படி இருந்திருப்பார்  என்று நடித்து காட்டினார்... சிரிப்பாக வந்தது. ஆயிரம்தான் பேசினாலும் யதார்த்தம் என்பது இதுதான் என்று தெரிந்து கொண்டேன்!


நானும் கீழே போட்ட lays பாக்கெட்டை எடுத்து குப்பைதொட்டியில்  போட்டுவிட்டு என் இருக்கையில் உட்கார்ந்து வீடு போய் சேர்ந்தேன்!!!

இப்போது புரிகிறதா!!! நான் ஏன் அப்துல் கலாம் பற்றி டயலாக் சொன்னேன் என்று???

என் முதல் படைப்பு!!!

நான் அக்மார்க் நல்லவனா??? 

___________________________________________________________


ஏய், மூனாறு ரூபா சில்லறையா குடுப்பா!!-
அண்ணே, ஒரு கேகே நகர் தாங்கண்ணே-
ஐய, சொம்மா ஓரசினேகிறியே, கொஞ்சம் தள்ளி நில்லுயா-
இன்ன யம்மா, என்னபோய் ஓரசரன்றியே -
யோவ் கருப்பு சட்ட, சீட்டு வாங்கிட்டியா???

என பேருந்திற்கு உரிய சம்பாஷனைகளுடன், அழுக்கு சகிதமாய் புழுதி பறக்க கிராமத்து பாதையில் சென்று கொண்டிருந்தது நான் அமர்திருந்த அரசு பேருந்து!!!


நல்லவேளையாக, நான் செய்த அவசர கால reservation என்னை ஜன்னல் ஓர சீட்டில் உட்கார வைத்தது!!!

 ஆம், பேருந்து, பேருந்து நிலையத்திற்கு வந்த உடன் சட்டைப்பையில் இருந்த என் கைக்குட்டையை ஜன்னல் வழியாக ஒரு சீட்டில் போட்டு விட்டேன், அதன் பயனாக ஜன்னல் ஓர சீட்!!!


அரசு பேருந்துகளில் இருக்கின்ற எழுதப்படாத சட்டம் இது!!! இந்த சட்டத்திற்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ன?


எனக்கு என் சீனியர் ஆபீசர் குமரன் சார் மீது கோபம்!!! ஆம், ஏற்கனவே எனக்கும் அந்த ஆளுக்கும் ஆகாது, இந்த எழவுல தேவையில்லாம பிரச்சனைல மாட்டிகிட்டேன்…


ஒரு ரெண்டு நாள் சொல்லாம கொள்ளாம அம்மாவ பாக்க ஊருக்கு போய்ட்டேன்!!! அதனால வியாழகெழம போக வேண்டிய files எல்லாம் திங்ககிழம தான் பொய் சேந்துதாம்!!! இதனால companyக்கு கெடைக்க வேண்டிய project கை நழுவி போச்சாம்!!!
போன மாசம் தான் promotion தருவதாக சொன்னார்கள், அதற்குள் இப்படி ஆகிவிட்டதால், என் promotion அவ்வுளவுதான்… வர்ற பணத்த வச்சி, லோன் போட்டு, ஒரு two wheeler வாங்கலாம்னு பாத்தேன்!!! முடிவெல்லாம் பண்ணி வச்சிருந்தேன்… அது நீல நிற ஸ்டார் சிட்டி…


இனி எப்படியும் promotion வர, ரெண்டு மூணு மாசம் ஆகும், அது வரைக்கும் இப்படி அவசர கால முன்பதிவு செஞ்சு தான் வீட்டுக்கு போகனும்!!!
null
ச்சே, என்ன வாழ்கைடா இது…???
ஜன்னல் ஓரமாக சூடான அனல் காற்று வீசியது. சற்று சாய்ந்து உட்கார்ந்தேன், நீண்ட பெருமூச்சு விட்டு எனது செல் போனை தேடினேன். பையில் இருந்து ஹெட்செட்டை எடுத்தால், அது இடியாப்பம் போல் சிக்கி கொண்டு இருந்தது!! இந்த ஹெட்செட்டை சிக்கலில் இருந்து பிரித்து எடுப்பது என்பது ஒரு ஜால வித்தை!!! முதலில் அதன் ஒரு நுனியினை கண்டுபிடித்து பின் ஒவ்வொரு சிக்கல் வழியாக அதனை நுழைத்து எடுக்க வேண்டும்… இவ்வாறாக செய்தால், பிரித்து விடலாம்… இறுதியில் எனக்கு வெற்றி!!!
காதில் மாட்டிக்கொண்டு fmஐ ஆன் செய்தேன், குர் கொர் என கத்ததொடங்கியது,அந்த fm … போனை சற்று ஜன்னலருகே கொண்டு சென்றேன். என் போன் ஜன்னலுக்கு வெளியே சென்ற fm அலைகளை பிச்சை எடுத்து, “காதலின் தீபம் ஒன்று” என்ற பாட்டை என் காதுகளுக்கு தானம் பண்ணியது.


குமரன் சார் promotion கொடுப்பாரா? வண்டி வாங்கிட முடியுமா??? என்று பல்வேறு எண்ணங்கள் என் உள்ளத்தில் ஓடின… நாளை என்ன ஆகபோகிறது என்பதை நினைத்தால் பீதியும் பயமும் ஒன்றாக என் நெஞ்சில் உட்கார்ந்து கொள்வதை என்னால் உணர முடிந்தது!!!
இதற்கிடையில் எனது அருகில் இருந்த ஜன்னலை மூடும் தாழ்பாலானது டக டகவென ஆடிக்கொண்டிருந்தது. லேசாக தலையை சாய்த்து பார்த்தேன், அந்த தாழ்பாலானது நேராக நிற்க துப்பில்லாமல், கீழே விழவும் முடியாமல், ஜன்னலோடு புரட்சி போராட்டம் பண்ணிக்கொண்டு இருந்தது!!! ஜன்னலில் இருந்து அதை விடுவித்து அதற்கு சாப விமோசனம் கொடுத்தேன்!
திடீரென்று ஓட்டுனர் பேருந்து வேகத்தை குறைத்தார், இறுதியில் engineஐ அதன் இயக்கத்தில் இருந்து ஓய்வு கொடுத்து, வெளியே சென்று விட்டார்!!! என்ன என்று ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தேன், வழக்கம் போல் accident ஒன்று அருகாமையில் அரங்கேறி இருந்தது. இதற்குள் பேருந்தில் இருந்த பாதி கூட்டம் குறைந்து விட்டது. நம் நாட்டு கலாச்சாரத்தை நானும் மதிப்பவனாதலால், என்ன ஆயிற்று என்பதை கூட்டத்தோடு கூட்டமாக காண, நானும் இறங்கினேன்!!! அந்த நபர் குப்புற படுத்துக்கிடந்தார், இறந்து விட்டாரா, அல்லது மயக்கத்தில் உள்ளார என்பதை சொல்ல முடியவில்லை. காலில், முதுகில் கைகளில் என அனைத்து இடங்களிலும் பலமான அடி. ஏய் யாராவது ambulanceஐ கூப்புடுங்கப்பா, என யாரோ ஒருவர் சொன்னார்! செல் போன் என்னிடம் இருந்தது, கால் செய்து இருக்கலாம் ஆனால், வேறு யாரவது செய்யட்டுமே என்று நினைத்தேன்!
இதற்குள் traffic clear ஆகி விட்டது, நான் வந்த பேருந்தும் கிளம்ப தயாரானது! பேருந்தை நோக்கி நானும் ஓடினேன், அச்சமயம் தற்செயலாக என் கண்கள் விபத்திற்கு உள்ளான அந்த நபரின் வண்டியை நோக்கியது!
அந்த நிமிடம் எனக்கு தூக்கி வாரி போட்டது!


நீல நிற எழுத்தில் “குமரவேல்” என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வெய்யிலில் ஜொலித்தது!

ஆம், என்னுடைய சீனியர் ஆபீசர் குமரன் சார் தான்! ஐய்யயோ இவரா? உடனே விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தேன்!! அவர் சட்டை பையில் இருந்து போனை எடுத்து அவரது மனைவிக்கு போன் செய்தேன், உடம்பில் சிறு அசைவுகள் தெரியவே,உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் மனைவியிடம் பொய் சொன்னேன். அவருடைய blood group என்ன என்பதையும் தெரிந்து கொண்டேன். இதற்குள் ambulance வரவே, அவரை தூக்கி ambulanceஇல் கிடத்தி, நானும் ஏறினேன்!


எனது நண்பனுக்கு போன் செய்து, b+ve blood உள்ள யாராவது ஒருத்தரை கூட்டிக்கொண்டு நாங்கள் செல்லும் மருத்துவமனைக்கு வர சொன்னேன், சற்று நேரத்தில் மருத்துவமனை வந்தது. எனது நண்பன் மட்டும்தான் வந்து இருந்தான்.என்ன என்று கேட்டால் அவனுக்கும் அதே ரத்த வகை தானாம். உடனே அட்மிட் செய்தோம். சினிமாக்களில் வருவதை போன்று டாக்டர்களும் நர்ஸ்களும் போவதும் வருவதுமாக இருந்தார்கள்!!!


சற்று நேரத்தில், மருத்துவர் வந்து, வெல் டன் மிஸ்டர் ரவி. சரியான நேரத்துல வந்ததுனால இவர் உயிர் காப்பாத்தபட்டுருக்கு!!! ஒரு வாரத்துல discharge பண்ணிடலாம் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்!!!


ஒரு வாரம் கழித்து நான் அலுவலகத்திற்கு இருக்கும் போது குமரன் சார் வந்தார்… தலையில் சின்ன bandage, கையில் புத்தூர் கட்டு. வந்த உடனே மேனேஜர் ரூமுக்கு போய் விட்டார்!!! சற்று நேரத்தில் என்னை கூப்பிட்டு, ப்ரோமோஷன் சான்றிதழையும், increment ஆர்டரையும் கண்ணீர் மல்க கையில் கொடுத்தார்….


நன்றி சொல்லிவிட்டு நேராக T.V.S. SHOWROOM ஐ நோக்கி– நடந்தேன்!!


இப்ப நீங்க சொல்லுங்க நான் என்ன அக்மார்க் நல்லவனா?