ஐய, இன்ன பாக்ற?

 ________________________________________________________________________________


     "ஹேய், ஐய, த... இந்த, ஹைஹைஹை" என்று மாட்டையும் கன்றையும் ஓட்டிக்கொண்டே வந்தான் மனோஜ், இல்லை கார்த்தி, இல்லை இல்லை 'கந்தசாமி'.

(மன்னிக்கவும், கிராமத்து கதைகளுக்கு இது போன்ற பெயர் வைத்தால் தான் சரிபட்டு வரும், அதான் இந்த குழப்பம்!) 

     பள்ளிக்கூடத்தல பன்னிரெண்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்கான், மேல படிக்க விருப்பமில்லாமல் அப்பாவோட விவசாயம் பண்ணிட்டு இருக்கான். தனக்கு எல்லா விஷயங்களும் தெரியும் என்பது போல் 'சீன்' போடுவான் அல்லது 'பாவ்லா' காட்டுவான், அல்லது வேறு எதுவேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள்! நான் சொல்ல வந்தது புரிந்தால் சரி!

     மாலை ஐந்து மணி:

     தாயையும் சேயையும், மரத்தில் கட்டிவிட்டு 'ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா' என்றவாறே வீட்டினுள் நுழைந்தான்.
கை கால்களை கழுவி விட்டு, 'யம்மோவ், டீயப்போடு' என்று தன அம்மாவிற்கு கட்டளையிட்டான். பதிலுக்கு 'இன்னது, டீப்போட்டலம் ஆயிப்போச்சு, பன்னிக்குட்டி கடைக்கு போய் வாங்கியா ' என்று சொன்னாள். மேலும் 'எண்ணயும் ஆயிப்போச்சு, போய் ரேஷன் கடையில வாங்கியா' என்று கொசுறு செய்தியும் வந்தது!

    மாடத்திலிருந்து தனது சைனா செல்போனை எடுத்து, ஏதோ ஒரு இளையராஜா பாடலை ஒலிக்கச்செய்தான். அது பெரும் சப்தத்துடன் "அலற" தொடங்கியது. அந்த அலறலுக்கு தனது மேல் பாக்கெட்டில் அடைக்கலம் கொடுத்து தெரு முனைக்கு வந்தான்! தெரு முனையில் ஒரு டீக்கடை இருந்தது, அதற்கு அந்த கிராம வாசிகள் வைத்த பெயர் "பன்னிக்குட்டி கடை".

     ஒரு காலத்தில் அந்த கடையின் முதலாளி பன்றிக்குட்டிகளை  மேய்த்து கொண்டிருந்தாராம், எனவே அம்மக்கள் அக்கடைக்கு வைத்த காரண இடுகுறிப்பெயர் அது! கடைக்கு வெளியில் கீற்றுகொட்டகை வேயப்பட்டு இருந்தது. தனது இடது கையை சட்டை பாக்கெட்டின் மேலே வைத்தபடி குனிந்து கொட்டகையின் உள்ளே சென்றான். செல்போனை எடுத்து இளையராஜாவின் கதறலுக்கு சற்று நேரம் இளைப்பாறுதல் அளித்துவிட்டு,

     "டே முருகா, ஒரு டீப்போட்டலம் குட்றா" என்றான். அந்த முருகன் செவப்பு பொட்டலமா, நீல பொட்டலமா என்று கேட்டான். சிகப்பு என்றால் த்ரீ ரோசெஸ், நீலம் என்றால் டாப் ஸ்டார். அதற்கு கந்தசாமி,  "செவப்பு பொட்டலம்" என்று கூறி ஏதோ தன்னால் இயன்ற லாபத்தை 'த்ரீ ரோசஸ்' கம்பனிக்கு   கொடுத்துவிட்டு, அங்கே இருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்தான்.

     அந்த பெஞ்சில் ஒரு கால் நிற்க துப்பில்லாமல்,  ஒரு செங்கல்லில் மீது தனது பாரத்தை வைத்தபடி ஊசலாடிக்கொண்டு இருந்தது. எப்போது வேண்டுமானாலும் விழலாம்.

     எதிர் பெஞ்சில் ராமராஜன் சட்டை, ராஜ்கிரண் கைலி ஆகியவற்றை உடுத்திய நான்கு பேர் கொண்ட குழு செய்தித்தாள் படித்துக்கொண்டு இருந்தனர். அதில் ஒரு ஒல்லி நபர், "யோவ் மணி, இங்க பாருய்யா, கம்போடியாவுல ஏதோ பெட்ரோல் ஏத்திட்டு வந்த லாரி கவுந்துட்டுதாம், வழிஞ்சி ஓடற பெட்ரோல புடிக்க ஊர் ஜனம் எல்லாம் போனதுங்களாம், திடீர்னு தீப்பத்திக்கிட்டு அந்த லாரி வெடிச்சதுல 70க்கும் மேற்பட்ட ஜனம் செத்துபோச்சாம். ம்ம்ச், படிக்கவே பாவமா இருக்குப்பா" என்று ஐந்து மணி செய்தியை வாசித்து முடித்தார்.

     "ஹுக்கூம், இன்னத்த பாவம்? அதுங்களுக்கு புத்தி கெட்டுபோய், கேவலம் பெட்ரோலுக்கு ஆசைப்பட்டு போச்சிங்க, அதான் ஒரேதடியா போய் சேந்ததுங்க"- இது மற்றொரு நபர்.

     "அதாவதுண்ணே, டேங்கர் லாரிக்கு பர்மிட் கொடுக்கும்போதே அது நெல்லா ஸ்ட்றாங்கக்குதா, நெல்லா ஒழைக்குதான்னு பாத்துதான் கொடுக்கணும்... இவனுங்க அதெல்லாம் பாக்காம் உட்ட, இப்டிதான் ஆவும்!" என்று கந்தசாமி சொன்னான்! இப்போது நால்வரின் பார்வையும் கந்தசாமியின் மீது இருந்தது.

     "அபிடியா?"- இது நால்வரில் ஒரு குண்டு மனிதர். "ஆமாண்ணே! அது மட்டும் இல்ல, பெட்ரோல் வண்டியேல்லாம் மெயின் ரோடு வழியா எடுத்துனு போகமாட்டாணுவ, கிராமத்து ரோட்டு வழியாதான் ஓட்டிட்டு போனும், எல்லாம் ஒரு சேப்டிக்குதான் " என்று தன வாய்க்கு வந்ததை எடுத்து விட்டான்!

     "இல்லியே, நேத்துகூட நம்ம பைபாஸ்-ல பெட்ரோல் வண்டிய பாதேனே!" என்று அந்த ஒல்லி நபர் சொன்னார். "என்னது, ஆங், அதுவா... அது வந்து காலி வண்டின்னே, ரிட்டன் போகும்போது மெயின் ரோட்ல போலாம்ல". அதற்கு அந்த குழு ஒரு சேர தலையாட்டியது.

     அது மட்டும் இல்ல, இது மாதிரி மேட்டர் நடந்தா மொதல்ல போலிசுக்கு போன் பண்ணி தகவல் சொல்லணும், அப்புறம் ஆஸ்பத்திரிக்கு போன் பண்ணி ஆம்புலன்ச வர சொல்லணும். போலீஸ் வர்ற வரைக்கும் யாரும் பக்கத்துல போகக்கூடாது என்று ஏகப்பட்ட பிட்டுகளை போட்டான்!

     "இதுல இம்மா மேட்டர்கிதாடா?" என்று மற்றொரு நபர் கேட்டார். "ஆமாமா, டேய் முருகா பொட்டலத்த குட்றா!" என்ற கந்தசாமி அதை வாங்கியவாறே "நம்ம ஊர்லதான் சாமா வாங்கினா காசு கொடுக்கறோம், ஆனா பாரின்லலாம் கிரெடிட் கார்டுதான். அத்த வச்சிகினு இன்ன பொருள் ஓனுனாலும் வாங்கலாம்" என்றான்.

     "ஓஹோ, அதான் வெளிநாட்லலாம் பணக்காரனுங்களாகிறானுங்க, இல்ல?" என்றான் அந்த குண்டு மனிதர். அதற்கு 'ஆமாமாம்' என்று சொன்னான் நம் ஹீரோ.

     இதற்கிடையில், குண்டு மனிதரின் எட்டு வயது மகன், "யப்போவ், யப்போவ், யப்போவ்...!" என்று கூப்பிட்டுக்கொண்டே ஓடிவந்தான்.

     "தேய், இன்யாடா?" என்றார். "யப்பா, மோட்டுத்தெருவாண்ட எண்ண லாரி கவுந்துடிச்சிப்பா, ஒன்ன அம்மா சீக்ரமா போய் எண்ண புடிக்க சொல்லிச்சி, பாமாயிலாம், வாப்பா போலாம்" என்று படபடவென்று சொல்லினான் அச்சிறுவன். "டேய், அங்கல்லாம் போவக்கூடாது, ஒழுங்கா வூட்டுக்கு போடா" என்று சொன்னார். "யப்பா, அல்லாரும் போறாங்கப்பா" என்று கூறிய சிறுவனை, "வூட்டுக்கு போடான்னா, நின்னு பேசினேகிறியே" என்று அதட்டினார் மிஸ்டர் குண்டு.

     "கந்தசாமி, சீக்ரம் போய், டேஷனுக்கு போன் பண்ணுப்பா" என்று அந்த குண்டு மனிதர் சொல்வதுற்குள் படாரென்று எழுந்து வேகமாக ஓடினான். அவன் எழுந்த அதிர்வில் செங்கல்லிடமிருந்து விடுதலை வாங்கிக்கொண்டது அந்த மர பெஞ்சின் கால்! அது 'டொம்' என்று பக்கத்தில் இருந்த மூங்கில் கழி மீது சாய்ந்தது. அந்த மூங்கில் கழியும் பார தாங்காமல் சாயவே, அந்த கீற்றுக்கொட்டகை 'டமார்' என்று அவர்கள் மீது விழுந்தது.

     வேகமாக வீட்டினுள் நுழைந்து கந்தசாமி எதையோ எடுத்துக்கொண்டு பின்வாசல் வழியே ஓடினான். அவனின் அம்மா, " டீப்போட்டலம் எங்கடா" என்று கேட்டதற்கு பதிலேதும் கூறாமல் மேட்டு தெருவை நோக்கி ஓடினான்! சிறிது நேரத்தில் அந்த இடத்தை அடைந்துவிட்டான். இதற்குள் அங்கு ஒரு ஏழெட்டுபேர் முண்டியடித்துக்கொண்டு, வழிகின்ற எண்ணெயை பாத்திரத்தில் பிடித்துக்கொண்டு இருந்தனர். அந்த காட்சியை கண்டவுடன், இவனுக்கு கோபம் வந்துவிட்டது. அவர்களை நோக்கி வேகமாக ஓடினான்.

     "ஏய், தள்ளு தள்ளு, யாரும் இங்க நிக்கக்கூடாது, போ போ போ..." என்று அனைவரையும் விரட்டினான். அனைவரும் இவன் வருவதை பார்த்ததும் நகர்ந்துவிட்டனர். லாரியிடம் சென்றவுடன், தான் கொண்டுவந்திருந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு எண்ணெயை பிடித்தான். இவனை பின்தொடர்ந்து அனைவரும் நின்றிருந்தனர்.

     இரண்டு நிமிடத்தில் அந்த குண்டு மனிதர் நெற்றில் கை வைத்து தேய்த்தபடியே, லாரியிடம் வந்தார். அங்கு முதல் ஆளாய் நின்று கந்தசாமி எண்ணெய் பிடிப்பதை பார்த்தார். அவனருகில் சென்று அவன் முகத்தை பார்த்தார்.

     இவர் வந்ததை கவனித்த கந்தசாமி, "ஐய, இன்ன பாக்ற?" என்றான்.