"மன்னித்துவிடு"

வெருமனே,
பழகிப் பழகி புளித்துவிட்டது என்றெண்ணினேனோ-உன்னை
அழவைத்துப் களித்தாகவேண்டுமென எண்ணினேனோ-அடை
மழையில் சுடும் சூரியனைப் போன்று

ஒப்பிலா செயல் செய்தேனோ,
தப்பென்று தெரியாது தோழி-உன் வாழ்வில்
எப்படியும் மறக்கமாட்டாய் என்றெண்ணிதானே

உன்னிடம் சண்டையிட்டேன்- அழுத
கண்ணிரெண்டை பார்த்து நடந்ததை
எண்ணி கூறுகிறேன், என்னை
மன்னித்துவிடு!

சிந்தை முழுதும் எந்தை....

நொந்தே மனம் வெதும்புகிறேன் - என்னறிவுச்
     சுடரைக் காற்றனைத்ததே - ஞாலந்
தந்தே காலஞ்சென்றனன் - என்னருமைத்
     தொடரப் பேறில்லையே! நின்னையறிந்து
சிந்தையிற் செதுக்குமுன் சென்றாயே - கூற்றவன்
     இடறி யிழுத்தானோ, கூறு? யான்பெற்ற
எந்தையே, என்றும் சிந்தைமுழு துமுனை
     படற வைத்தேத் தொழுவேன்!

தமிழகத்தின் கல்விக்கடைகள்

      இன்றும் கூட எங்கள் கிராமத்தில், ஊர்த் தலைவரைவிட, துவக்கப்பள்ளி தலைமையாசிரியரையே ஊர்மக்கள் பெரிதும் மதிக்கின்றனர். இன்று நகரங்களில் ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கப்படுகிறதா என்று எனக்கு தெரியவில்லை. பல்லாவரத்தில், போன வாரம் ஒரு பள்ளியின் ஆசிரியர் ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டி காவல்துறையிடம் சிக்கவே, அவரை அலேக்காக அமுக்கி கர கர வென்று கரந்துவிட்டனர். ஆசிரியரும் கொஞ்சம் "அமுத்தலாக" பேசவே, போலிஸ்காரர் கடுப்பாகிப்போனார். பின்பு, தான் செய்த தவறிலிருந்து தப்பிப்பதற்காக பிரம்மாஸ்த்திரமான "தான் ஒரு பள்ளியின் ஆசிரியர்" என்பதை பிரயோகப்படுத்தினார். ஆனால் முறுக்கு மீசையோ "என்னடா பெரிய வாத்தி? நாம்பாக்காத வாத்தியா?" என்று ஏகவசனத்தில் பேசினார். வாத்தியார்களெல்லாம் எப்படிப்பட்டவர்கள் என்ற தனது தனிப்பட்ட கருத்தையே, பெரும்பாலானவர்களின் பண்பு என்று முடிவுசெய்துவிட்டார். முறுக்குமீசையின் அந்த பண்பைப்பற்றிய பேச்சுக்கு பக்கத்தில் இருப்பவர்கள், ஆமாஞ்சாமி போட்டனர். கடைசியில் கூனிக்குறுகி அந்த ஆசிரியர் ஃபைன் கட்டிவிட்டு, வசைவாங்கிவிட்டு சென்றார். என்ன ஆச்சோ, ஆசிரியரின் அரும்பணியை இவர்கள் "வாத்திவேலையாகவே" பார்க்கின்றனர்.

     எங்கள் வகுப்பில் புதிதாக ஒரு ஆசிரியர் ஒருவரை வேலைக்கு அப்பாய்ண்ட் செய்திருந்தனர். வந்ததும் வராததுமாய், நிறைய வியாக்யானங்கள், விதண்டாவாதங்கள் பேசினார். "என் வேலை இந்த சிலபஸ்ஸ முடிக்கணும். அவ்ளோதான், நீங்க கவனிக்கறீங்களா, இல்லையான்னு பாக்கறது என்னோட வேலை இல்ல. நா அதுக்கு சம்பளமும் வாங்கல. நாம்பாட்டுக்கு வருவேன், கிளாஸ் எடுப்பேன், போய்கிட்டே இருப்பேன்." என்று பேசினார். என் நண்பர்களோ, "மச்சி, இவருதாண்டா உண்மையான காலேஜ் புரபசர்". என்றெல்லாம் புகழ்ந்தனர். காரணம், அவர் எதைப்பற்றியும் கண்டுகொள்வதில்லை. வந்தோமா, பாடம் எடுத்தோமா என்றிருக்கிறார். மாறாக, எனது நெருங்கிய நண்பன் ஒருத்தன் இதை முற்றிலும் எதிர்த்தான். "இவரு எல்லாம் teaching professionனுக்கே சரிபட்டு வர மாட்டார். நீ வேணும்னா பாரேன், இன்னும் ஒரே மாசத்துல இந்த ஆள டிஸ்மிஸ் பண்ணிடுவாங்க" என்றான். என்னைப்பொருத்தவரை அவரைத் தப்புசொல்லி ஒன்றும் பயனில்லை. காரணம், மாணவர்களுக்கு பாடம் எடுப்பதை ஒரு சம்பளம் வாங்கும் வேலையாகத் தான் பார்க்கிறார். அவரைப்பொருத்தவரைக்கும் தினமும் இரண்டு மணிநேரம் தான் மனப்பாடம் செய்ததை ஒப்பிக்கவேண்டும். மாதம்பிறந்தால், உழைத்த உழைப்பிற்கு கூலிவாங்கவேண்டும். அவ்வுளவுதான். எனக்கு அந்த வாத்தியார் மீது கோபமில்லை, அவரைப் பிடித்துபோகவுமில்லை. அவர் அப்படி மாறக் காரணமான சமூகத்தின் மீதுதான் கொஞ்சம் கோபமும் வருத்தமும் பட முடிந்தது.
 
     எனது நண்பனின் அண்ணனை " B.E முடிச்சிட்ட, அடுத்து என்ன?" எனக்கேட்டபோது. "ஒன்னும் வேல கெடைக்கற மாதிரி தெரியல, இன்னும் ரெண்டு வருஷம்தான், M.E முடிச்சிட்டு ஏதாவது காலேஜ்ல லெக்சரரா ஜாய்ன் பண்ணப் போறேன்." என்றார். தலையில் அடித்துக்கொண்டேன். இந்த அளவுக்கு நம் கல்விமுறை தரங்கெட்டு போய் இருப்பதற்கான காரணம் பற்றி எனக்கு தெரியவில்லை அந்த காரணத்தைப்பற்றியும் நான் அலசப்போவது இல்லை. நான் அதற்கு அருகதையானவன் இல்லையோ என்னமோ? ஒரு விடயம் சரியாக இல்லாதபோதும், அது சரியில்லை என எனக்கும் தெரிந்தபோதும், ஏனோ அது சரிதான் என்று உருவகம் செய்து அதையே பின்பற்றிவிட்டு அதைப்பற்றியே எப்படி என்னால் அவதூறாக பேச இயலும்? சரி இது ஒருபுறமிருக்கட்டும்.

     விலைவாசி ஏறுகிறது. கல்விக்கடைகளிலும் இன்று கல்வியின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது, கட்டுப்படுத்தவே முடிவதில்லை. பணம்படைத்தவருக்கு மட்டுமே இன்று தரமான கல்வி கிடைக்கிறது. இன்று தமிழ்நாட்டில் ஒரு சராசரி மாணவன் பொறியியலை காசுகொடுத்து வாங்க குறைந்தபட்சம் 3 இலட்ச ரூபாய் தேவைப்படுகிறது. பல இரண்டாம் தர கல்லூரிக்கடைகளில் குறைந்தது 4 இலட்சம் ஆகிறது. நம்மில் பலரில் நான்காம் ஆண்டில்தான் "அஹா, இவ்வுளவு செலவு ஆகுமென  தெரிந்திருந்தால், மூடுவிட்டு ஒழுங்காக சுயதொழில் செய்திருக்கலாமே" என்று ஞானோதயம் பிறக்கிறது! போதாக்குறைக்கு வெளிநாட்டுக்கல்லூரிக்  கடைகளின் கிளைகளை இங்கே திறப்பதற்கு மசோதா ஒன்றும் தயாராகிக்கொண்டு இருக்கிறதாம். மசோதா மட்டும் இயக்கப்பெற்றால், என்னென்ன நன்மைகள் வருமென எனக்கு தெரியாது. மாறாக உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படுவர். வெளிநாட்டு வியாபாரிகளிடம் இருக்கும் சரக்குகளைத் தாமும் தமது கடைகளில் வாங்கிப்போட்டு கல்வியின் விலையினை ஏற்றிவிடுவர். பாதிக்கப்படுவது என்னமோ, மிடில் கிளாஸ் மாதவன்களின் பிள்ளைகள் தான். அடித்தட்டு மக்களுக்கு இன்னமும் கல்வி என்பது சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும் உயர்ரக வாசனைத் திரவியமாகத்தான் உள்ளது!

      இதை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். இதைப் பற்றி நண்பனிடம் பேசியபோது, அவன் இதற்கு முழுமுதற்காரணம் என  உலகமயமாக்கலைத்தான் சொன்னான்.

     1886-இல் பாரதி, தனது 14ஆம் வயதில் எட்டையபுர மன்னருக்கு இவ்வாறு கடிதமொன்றை எழுதினார். அதில் ஒரு பகுதி.

......இன்தமிழ் கற்பினோ,
பின்னை ஒருவரும் பேணார், ஆதலின்
கன்ன, யான் இம்மொழி கற்கத் துணிந்தனன்!
எனினும்,
கைப்பொருள் அற்றான் கற்பது எவ்வகை?
பொருளால் அன்றிக் கல்வியும் வரவில
கல்வியால் அன்றிப் பொருளும் வரவில.....

     தமிழ்க் கற்றால், ஒரு மதிப்பும் இல்லை. எனவே தான் ஆங்கிலம் கற்கிறேன். ஆயினும் ஆங்கிலமேயானாலும், பணமின்றி எவ்வாறு பயிலமுடியும்? பணமின்றி கல்வியும் கிடைக்கவில்லை, கல்வியின் துணையின்றி பணமும் கிடைக்கவில்லை. எனவே, தாங்கள் எனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

      பாரதிக்கு உதவிகிடைத்ததாக எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அவருக்கு உதவி கிடைத்திருந்தால், அதுபோன்று மன்னர்கள் இன்றும் இருந்திருந்தால், இந்த கட்டுரையை நான் எழுத அவசியம் நேர்ந்திருக்காது!

தோழிக்கு கவிதை...

"லூசு" 


தேர்வுக்கு படிக்காதபோதும்,
ஆர்வமுடன் அவளை விட்டு படித்தபோதும்,
கல்லூரிக்கு காலதாமதம் ஆனதும்-பேசிய
சொல்லும் செயலும் வேறானபோதும்,


குண்டு என கேலிசெய்த போதும்- போன
ஆண்டு பிறந்தநாளை மறந்தபோதும்-அவள்
உண்டு உண்டு உருபெருத்த போதும்- அதைக்
கண்டு நான் நகைத்தபோதும்- சென்ற
வாரம் அவளிடம் பகைத்தபோதும்-கா
தோரம் 'தோடு', ரசித்து சிரித்தபோதும்,

 
கல்லூரியில் அழகாக உடை உடுத்தாதபோதும்,
செல்பேசியில் அழைப்பை எடுக்காத போதும்-சொன்ன
சொல்லை மழுப்பி அடுக்கிய பேச்சின் போதும்

என, எதற்கெடுத்தாலும் தோழியிடம் 
     வசை வாங்குவதுதான் என் பிழைப்பு!
அட, அதற்காக அவளளித்த இடுகுறிப்பெயர்
       தான் இக்கிறுக்கலின் தலைப்பு!

முதல் கவிதை!!!

தோழியின் பிறந்தநாளுக்காக நான் எழுதிய முதல் ஒழுங்கான கவிதை.

சுட்டெரிக்கும் சித்திரையிலும் - நல் இரவில்
தொட்டுத் தொடரும் நித்திரையிலும்

தினந்தினம் காற்றடிக்கும் ஆடியிலும் - நல்ல
மனந்தனை ஏற்றிருக்கும் நண்பர்களூடும்

கார்மேகம் பொழியும் கார்த்திகை மழையிலும்- என்றும்
ஆர்வமின்றி கழியும் கல்லூரி நாட்களிலும்

பனிபோல் படர்ந்த மார்கழி மாலையிலும்- நனி மாங்
கனிபோல் இனிக்கும் எவ்வேளையிலும்

கள்ளங்கபடமில்லா நம்நட்பை மறக்கவில்லை,
உள்ளந்தோறும் மலரும் நினைவுகளையும் துறக்கவில்லை,
சொல்லும் செயலும் உன்னை புறக்கணித்ததுமில்லை,

எப்பொழுதேனும் தப்பிழைத்திருந்தால்
இப்பொழுதே மனத்தினின்று அழித்துவிடு.
அப்படியே  இதையும் அகத்தில் எழுதிவிடு,

 
எனதருமைத் தோழியே,
மனது முழுதுமின்பமாய் -
நீங்காத நினைவுகளுடன்,
மங்காத மகிழ்ச்சியுடன் - இன்றுபோல்
நூறாண்டு வாழவேண்டும்- என்றுமே
மாறாத நட்பும் வேண்டும்.

ஆயிரம் கற்றபோதிலும்- ஆதலால்
வேலை பெற்றபோதிலும்,
உன்துணை ஏற்றபோதிலும்,
உற்ற நண்பனை
முற்றிலும் மறந்துவிடாதே!

நெஞ்சில் மாறா நட்புடன் "இரவிசங்கர்"