முதலில் இவ்விஷயத்தில் எனக்கு அவ்வுளவாக ஈடுபாடு இல்லை. தமிழுக்கென்று தனி காலண்டர் இருப்பதில் ஒன்னும் மாற்றுக்கருத்து இல்லை. இருந்தாலும், தோழர் துரை சரவணன் அவர்கள், அவருடைய ஸ்டேட்டஸ் அப்டேட்டில் திருவள்ளுவர் ஆண்டே தமிழ் புத்தாண்டு என்று கூறினார். அதை பார்த்ததும், இந்த கட்டுரையை பதிந்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். இது நல்ல சீர்திருத்தம் தான், இருப்பினும், ஆண்டாண்டு காலமாக கடைபிடித்து வரும் ஒரு பழமையான நாகரிகத்தின் வழக்கத்தை இப்படி பொசுக்கென்று மாற்றுவது ஏன்?
இவ்வாறு பேசுவது பழமைவாதித்துவம் என்று எண்ணவேண்டாம்!
ஒரு மாறுதலுக்கு, உண்ட பின் குளித்தால் நன்றாக இருக்குமா? அல்லது இடக்கையில் உண்டாலும் நன்றாக இருக்குமா? முற்றிலும் முற்றிய முற்போக்குவாதிகளுக்கு இதுவும் சரி என்று படலாம். ஆனால் சாமானிய மக்களுக்கு?
மனித நாகரிகம் தோன்றியது முதல் கொண்டாடப்படுகின்ற புத்தாண்டில் போயா சீர்திருத்தம் பண்ணுவது? ரத்தத்தில் ஊறிய தமிழ் வருடப்பிறப்பை மாற்றுவது என்பது சாதாரண காரியம் அல்ல! மேலும் இவ்வஷயத்தை ஏற்றுக்கொள்ள, தமிழ்நாடு முழுவதும் முற்போக்குவாதிகள் வசிக்கவில்லை!
எனது நண்பனிடம் இதைப்பற்றி கூறினேன். அவன், "போடா டேய், ஆங்கில காலண்டர்லே ஜனவரி ஒன்னு தான் நியு இயர், அதே மாதிரி ஜனவரி மாசத்துலே நாமளும் கொண்டாடலாம்" என்றான். அவசரமாக எங்கேயோ சென்று கொண்டிருந்த அவனை, அரை மணி நேரம் நிற்க வைத்து லெக்சர் கிளாஸ் எடுத்தேன். "நாம் அனைவரும் கொண்டாடுகிறோமே, ஆங்கிலப்புத்தாண்டு அது ஒன்னும் நாகரிக வழக்கம் இல்லை. 15 -ஆம் நூற்றாண்டில் எட்டாம் போப் கிரிகோரி தான் ஜனவரி ஒன்றிற்கு ஆங்கிலப்புத்தாண்டை மாற்றினார். அதற்கு முன் ஏப்ரல் ஒன்றே வருடப்பிறப்பாக இருந்தது. இந்த சீர்திருத்தத்தை அக்கால மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, போப்பின் விசுவாசிகள் ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று, அனைவருக்கும் போலியான பரிசுகளை கொடுத்து ஏமாற்றி கேலி செய்தனர். இதுவே காலப்போக்கில், April fools dayவாக மருவியது. விசித்திர ஆங்கிலேயர்கள் அதையும் கொண்டாடுகின்றனர் அவர்களைப்பார்த்து நாமளும் மற்றவர்களை ஏமாற்றி மகிழ்கிறோம்".
சாதாரண புத்தாண்டு தேதிதானே, எப்பொழுது கொண்டாடினால் என்ன? என்று கேட்காதீர்கள். தமிழனின் புத்தாண்டு திருவள்ளுவர் ஆண்டு தான் என்கிறீர்கள். வாஸ்தவம் தான். திருவள்ளுவர் தான் தமிழை கண்டுபிடித்தது போல், அவர் வாழ்ந்த காலத்தை பற்றிய காலண்டரையே பின்பற்றலாம் என்று சொல்லுவது தான் அபத்தம். அவரது காலம், கி.பி. மூன்றாம் நூற்றாண்டு எனக்கூறுகின்றனர். அதற்கு முன், தமிழே இருக்கவில்லையா? சரி, அதுபோகட்டும், இவ்வுலகில் இருந்து வந்த பழைய நாகரிகங்களில் பலவற்றில் புத்தாண்டு மார்ச் மாதம் கடைசி வாரத்திலோ, அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலோ தான் கொண்டாடப்பட்டு வந்தது.
உதாரணமாக, 2012 இல் உலகம் அழியப்போகிறது என்று கூறிய ஆஸ்டெக் (Aztec) காலண்டரில் புத்தாண்டு மார்ச் இறுதி தான். இஸ்லாம் தோன்றிய மத்திய கிழக்கு நாடுகளிலிலும், பாரம்பரியம் மிக்க பாரசீகம் நாட்டிலும் ஏப்ரல் மாதம் தான் புத்தாண்டாக இருந்ததாக விக்கிபீடியா கூறுகிறது. கிருத்துவர்களும் மார்ச் இறுதியில் வருகின்ற Annunciation என்ற ஒரு விழாவைத்தான் வருடப்பிறப்பாக கொண்டாடினர் எனவும் செய்திகள் உண்டு. தாய்லாந்து நாட்டு மக்களும், பஹாய் மக்களும் கூட, ஏப்ரல் மாதம் தான் தங்களின் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். ஐரோப்பா கண்டத்தில் பழமையான நாகரிகம் கொண்ட ரோம் நாட்டிலும், மார்ச் மாதமே புத்தாண்டாக கொண்டாடினர்.
மேலும், நம் சித்திரைதிருநாள் வழக்கப்படி, அன்று உணவில், இனிப்பும் கசப்பும் சேர்த்துக்கொள்வது வழக்கம். மேலே கூறியுள்ள அனைத்து இனத்தவரும் இதே போல், இனிப்பு உணவை சேர்துக்கொண்டாடுகின்றனர்.
எனவே, ஏறத்தாழ உலகிலுள்ள அனைத்து பாரம்பரியம் மிக்க இனத்தவரும் Vernal Equinox எனப்படுகிற கால நிகழ்வுக்கு அடுத்து வருகின்ற வசந்தகாலத்தை (இளவேனிற் காலம்) தான் தங்களின் வருடப்பிறப்பாக கொண்டாடுகின்றனர். மனித நாகரிகம் தோன்றியது முதல் இருக்கின்ற வழக்கம் இது. சீர்திருத்தம் செய்கிறோம் என்ற பெயரில் இதையெல்லாமா மாற்றுவது? இதில் வருத்தபடுகிற விஷயம் என்னவென்றால், மேலே கூறியுள்ள அனைத்து இன மக்களும், இன்று கிரிகோரியன் காலண்டரை கடைபிடிக்க தொடங்கிவிட்டனர். இதனால், அவர்களின் அடையாளம் அழிந்துகொண்டு வருகிறது என்று தான் சொல்லவேண்டும். இந்தியாவின், குறிப்பாக தமிழ்நாட்டின் சிறப்பே அதன் பாரம்பர்யம் தானே! இதையும் மாற்றி விட்டால், அப்புறம் நமக்கென்று என்ன அடையாளம் மிஞ்சி உள்ளது?
மனித வாழ்வில் விழாக்கள் என்பது மொழி கடந்து, இனம் கடந்து கொண்டாடப்படுகின்ற சமாசாரம். இதில் போய், சீர்திருத்தம் செய்வதில் எந்த ஒரு புண்ணியமும் இருப்பதாக எனக்கு தெரியவில்ல்லை.