ஆங், அப்புறம், இந்த கதையை கசிந்து உருகி எல்லாம் எழுதல, வழக்கமான கேளியோடையும், கிண்டலோடையும் தான் எழுதி இருக்கேன்!
பில்ட் அப் போதும்னு நெனைக்கறேன், சரி வாங்க கதைக்கு போகலாம்!
கதையை எழுதி முடித்துவிட்டு, என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தபோது, என் தலைக்கு மேல் ஒரு பல்பு எரிந்து சூரமொக்கையான தலைப்பு வெளியிட உதவியது.
_________________________________________________________________________________
"ஒன்பது நிமிடத்தில் காதல்"
ட்ரீம் லொகேஷன்: ஊட்டி;
பேக்ரவுண்டு பாடல்: நினைவோ ஒரு பறவை;
ஹீரோ- அகில்;
ஹீரோயின்- ஒரு தேவதை.
இருவரும் ஸ்லோ மோஷனில் ஒருவரை நோக்கி ஒருவர் ஓடி வருகிறார்கள்.
ட்ட்ட்ரீரீரீரீரீரீரீரீரீரீரீங்ங்ங்ங்!
என அலாரம் அடித்ததால் கனவு கலைய, தனது போர்வையை உதறித்தள்ளி, பழிவாங்கிய அலாரத்தின் தலையில் ஒருதட்டு தட்டினான் அகில். அலாரம் அவனுக்கு கட்டுப்பட்டு தனதுவாயை பொத்திக்கொண்டது! ம்ம்ம் என்று முனகியவாரே, மீண்டும் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டான்! மணி சரியாக ஆறு
இந்த அலாரத்தை off செய்து மீண்டும் தூங்குவதே தனி சுகம்! அந்த சுகத்தை அனுபவிக்க அவன் மட்டும் விதிவிலக்கா என்ன?
எவ்வுளவோ தூங்க முயன்றும் தேவதையுடன் அவனால் மீண்டும் அந்த லொகேஷனுக்கு செல்ல முடியவில்லை
அகிலைப்பற்றி சொல்வதற்கு பெருசா ஒண்ணுமில்லை, வயது 24, நல்ல உயரம், ஸ்மார்ட்டாக இருப்பான். BSC., படித்திருக்கிறான், சென்னையில் ஒரு கம்பெனியில் 6000திற்கு வேலை செய்கிறான், இதுவரை யாரையும் காதலித்தது இல்லை! ஒரு வாரத்திற்கு முன் தான் அவனது நெருங்கிய நண்பன் யாரோ ஒரு பெண்ணை, உருக உருக காதலித்து திருமணம் செய்துகொண்டான்.அவன் திருமணத்திற்கு gift வாங்கையில் தான், அவனுக்கு முதல் முதலாக தேவதை தரிசனம் கிடைத்தது!
இனி அந்த தேவதையை பற்றி: சென்னையில் ஒரு பிரபலமான பரிசுப்பொருட்கள் கடையில் supervisor-ஆக வேலை செய்கிறாள். வயது 21 இருக்கலாம். சூப்பர் பிகர் எல்லாம் இல்லை, சுமாரான அழகு. அகிலை பக்கத்தில் வைத்து பார்த்தால் இருவரும் நல்ல ஜோடியாக இருப்பார்கள்! முதல் சந்திப்பு அன்றே, இவளும் அவனை கண்டு ஏக்கமுற்றாள். ஆனால் இருவரும் பேசவில்லை.
போர்வையை உதறித்தள்ளி, கட்டிலை விட்டு துள்ளி எழுந்தான், நேராக சென்று காலெண்டரில் 11/11/1982 என்ற தேதியை கிழித்தான். தனது தனுசு ராசிக்கு என்ன பலன் என்று பார்த்ததில், "காதல்" என்று அச்சிடப்பட்டு இருந்தது!
சனிக்கிழமை. அலுவலகம் விடுமுறை!
குளித்து முடித்து, சிற்றுண்டியை முடித்துவிட்டு இன்று தனது "கனவு தேவதையிடம்" காதலை சொல்லாமல் தூங்குவது இல்லை என சபதம் மேற்கொண்டான்! காலை பத்து மணிக்கு வெளியே செல்லலாம் என்று நினைத்து தனது பஜாஜ் chetak வண்டியை வெளியே எடுத்தான்.
கடந்த சில நாட்களாகவே காதல் படங்களையும், கவிதைகளையும், பாடல்களையும் ரசிக்க ஆரம்பித்து இருந்தான்! அன்று நண்பனின் கல்யாணத்திற்கு பரிசு வாங்குகையில், அந்த பரிசு பொருட்கள் கடையின் முதலாளி, "சாருக்கு மேரேஜ் கிப்ட்ஸ் காட்டும்மா" என்றதும், அந்த தேவதை அவனை ஏறிட்டது.
அந்த கனம் தான், அவன் நெஞ்சில் லார்வா முட்டை போட்டது! இன்று பட்டாம்பூச்சி டெலிவரி ஆகி, வெளியே வந்து சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறது. சென்னையின் தெருக்களினூடே வண்டியை செலுத்தியவாறே 'ஈ' என்று பல்லை இளித்துக்கொண்டு, காதலியை காணப்போகிறோம் என்று களிப்புற்றான்!
நேராக கடைக்கு வாசலில் வண்டியை பார்க் செய்து விட்டு, உள்ளே நுழைய முற்பட்டான்! வாசலுக்கு பக்கத்தில் செல்ல செல்ல அவனுக்கு இதயத்துடிப்பு அதிகமானது. நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டே கடைக்கு உள்ளே சென்றான். கடையில் கடிகாரம் மணி 11 என இசைத்து அறிவித்தது. இவன் வருவதை கவனித்த அந்த தேவதை, நேராக தனது இடத்திற்கு கொலுசிட்ட கால்களின் உதவியால் ஓடினாள்!
வெள்ளை நிற சுடிதார், அதிகம் மேக்கப் இல்லாத முகம், கண்ணில் மையிட்டிருந்தாள், இதழில் மெலிதாக ரோஜா நிற லிப்ஸ்டிக், புருவத்திற்கு மத்தியில் கால் இன்ச் குங்குமக்கீற்று, இவை அனைத்தும் அவளை சுமாரான பிகர் அந்தஸ்திலிருந்து சூப்பர் பிகர் அந்தஸ்திற்கு உயர்த்தியது.(ஆயிரம்தான் கதைக்கு நான் ஆசிரியராக இருந்தாலும், மாற்றான் காதலியை பிகர் என்று வர்ணிப்பது தவறு. அகில் என்னை மன்னிப்பானாக!)
அவளை கண்டவுடன், அகிலனுக்கு காலையில் விட்டுப்போன கனவு மீண்டும் மனக்கண்ணில் தோன்றியது. அந்த தேவதையை கண்டவுடன் இவனால் ஒன்றும் பேச முடியவில்லை, ஸ்தம்பித்து போனான்! தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கல்யானப்பரிசுகளை வாங்கும் இடத்திற்கு சென்றான்.
அவளுக்கு அருகில் சென்றான், இருவருக்கும் இடையில் கண்ணாடிப்பேழை ஒன்று குறுக்க இருந்தது. அந்த தேவதை இவன் வருவதை கண்டு கொள்ளாமல் இருப்பது போல், தலை கீழே குனிந்து நின்றிருந்தது! இவன் தனது தொண்டையை கனைத்துக்கொண்டு, சற்று ஜெர்க் விட்டான்!
மெதுவாக தனது தலையை உயர்த்தி பார்த்தாள். அப்போது
"அவளும் நோக்கினாள், அண்ணலும் நோக்கினார்"
(கம்பர் இந்த வரிகளுக்கு copyright வாங்கவில்லை என நம்புகிறேன்!)
அவள் சுதாரித்துக்கொண்டு, "என்ன வேணும் சார்?" என்றாள். இவனோ அரை இன்ச் வாயை திறந்து, ஒரு சிலையை போலவே நின்றுகொண்டு இருந்தான். அந்த தேவதை, தனது இரு கைகளை கட்டிக்கொண்டு, புருவத்தை உயர்த்தி "ஹலோ சார்?" என வினவினாள். இதற்கும் அவனிடத்தில் பதில் இல்லை.
அவளின் அழகில் சொக்கி, அவன் மனம் தவிடுபொடியானதை, அவனால் உணரமுடிந்தது.
பின் அந்த தேவதை தன் தலையை லேசாக வலப்பக்கம் சாய்த்து, பின் இதழோரம் புன்னகைத்து. கைகளை அவன் முகத்திற்கு முன் வலப்புறமும், இடப்புறமும்
ஆட்டி "சார், என்ன வேணும்னு சொல்லுங்க!" என கேட்டது.
எங்கேயோ நயாகரா நீர்வீழ்ச்சிக்கும், தாஜ்மகாலுக்கும், பாரிசின் ஈபில் டவருக்கும் பறந்து சென்ற தன் மனதை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி கடைக்குள் கொண்டு வந்தான்!
இதற்கும் மேல் அசடு வழிந்தால், நல்லதல்ல என்று நினைத்தவனாய்,
" அ..., ம்ம்..., மி, மிஸ், உங்க பேரு என்ன?" என்றான். அதற்கு அந்த தேவதை "என்ன மிஸ்டர், என்னோட பெயர கேட்டு தெரிஞ்சுக்கவா வந்தீங்க, அப்ப gift வாங்க வரலையா?" என சிரித்துக்கொண்டே கேட்டது!
"அப்படி இல்ல, போன தடவ வந்த போதே உங்கள பாத்தேன், ஆனா பேச முடியல! அதான்..." என்று அசடு வழிந்தான்! "சரி என்னோட பேரு திவ்யா" என சொல்ல அவன் அகில்திவ்யா என தன் மனதிற்குள் பெயரை இணைத்து சொல்லிக்கொண்டான். உங்க பேர சொல்ல மாட்டீங்களா? அம், அ... என்னோட பேரு அகிலன், சரி எனக்கு ஒரு gift வேண்டும்! என சொன்னான்.
"யாருக்கு?"
"உங்களுக்கு தான்!"
"என்ன?"
"இல்ல, உங்கள மாதிரி ஒரு அழகான பொண்ணுக்கு தான்!"
"யாரு? உங்களோட காதலியா?"
"இல்ல, இது வரைக்கும் அவங்க என்ன காதலிக்கல, இனிமே காதலிப்பாங்கனு நம்பறேன்! "
"ஒன்னும் புரியலையே"
"எனக்கே ஒன்னும் புரியல, என்ன நடக்குதுன்னு தெரியல!"
இதற்குள் திவ்யா ஒரு giftஐ எடுத்து "இது நல்லா இருக்கானு பாருங்க" என்றாள்.
அவன், அந்த giftஐ காணாமலே, அவள் முகத்தை பார்த்தபடியே "நல்லா இருக்கு"
என்று சொன்னான். என்ன அகிலன், பாக்காமலேயே நல்லா இருக்குனு சொல்றீங்க?
"அழகு தேவதையின் கைப்பட்டால் அத்தனையும் அழகு தானே!" என சொல்ல அவள் கன்னங்களில் பிங்க் நிறம் ஒட்டிக்கொண்டது. சரி அகிலன், என்ன பண்றீங்க? என கேட்டதற்கு, தனது கம்பெனி பெயரையும், தான் வகிக்கின்ற போஸ்டையும் பற்றி சொன்னான்! அப்படியே அந்த gift ஐயும் பேக் பண்ண சொன்னான்!
"உங்களை, மறுபடியும் சந்திக்கும் நாளை எதிர்நோக்குகிறேன் திவ்யா!"
"அது என்னவோ தெரியல திவ்யா, உங்க கிட்ட இதுவரைக்கும் ஒரு நூறு வார்த்தை கூட பேசி இருக்க மாட்டேன்! ஆனா, ஏதோ பல கோடி வார்த்தைகள் பேசி, பேசுவதற்கு வேறு வார்த்தையே இல்லாமல் போல் பிரமையா இருக்கு"
இது வரைக்கும் உங்ககூட ஒரு பத்து நிமிஷம் தான் இருந்து இருப்பேன்! ஆனா, பல நூறு வருஷம் உங்களோட இருந்தது மாதிரியும் வியப்பா இருக்கு!"
"எனக்கும் தான், அகிலன்" என நாணத்துடன் கூறி கீழே குனிந்து கொண்டாள்!
மெலிதாக புன்னகைத்து, "யெஸ்", என தன் மனதிற்குள் சொல்லிக்கொண்டான்! அப்படினா இன்னிக்கி ஆறு மணிக்கு கிரீன் பார்க்கில் உங்களுக்காக காத்துட்டு இருப்பேன்.
என்ன ஏமாத்த மாட்டீங்கன்னு நம்பறேன்.
கீழே தலை குனிந்தவள், அப்படியே இருந்தாள்!
"மௌனம் சம்மதத்துக்கு அறிகுறியா?"
"உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்! இப்ப இல்ல, ஆறு மணிக்கு. மறக்காம வந்துடுங்க "
"சரி, இன்னிக்கு ஈவ்னிங் 6 மணிக்கு உங்கள எதிர்பார்பேன் "
இதற்கும் பதில் இல்லை, மாறாக மௌனமே பதிலாக வந்தது. அகிலனும் வாங்கிய பொருளுக்கு பணம் கொடுத்துவிட்டு, வெளியே செல்ல ஆயத்தமானான்! பாதி வெளியே சென்றவன், தனது தலையை மட்டும் எட்டி உள்ளே பார்த்தான், இவன் திடீரென்று பார்த்ததை சற்றும் எதிர்பாராத அவள், கீழே ஒளிந்து கொண்டாள்.
"என்ன ஏமாத்தமாட்டீங்கல்ல?"
இதற்கு மட்டும் இல்லை என்று தலை ஆட்டினாள்!
இவன் அவளை கண்டு சிரிக்க, அவளும் இவனைக்கண்டு வெட்கி தலை குனிந்தாள்! தனது கைக்கடிகாரத்தில் மணியை பார்த்தான்- 11 மணி 9 நிமிடம் ஆகி இருந்தது...
சாயுங்காலம் ஆறு மணி.
கிரீன் பார்க், அரை இருட்டு வெளிச்சத்தில் திவ்யா ஒரு தேவதை போல இருந்தாள்.
ரம்மியமான மாலைப்பொழுது. இருவரும் பார்க்கில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்தனர். அவளின் கைகளை தனது கையோடு அணைத்து, இறுக பிடித்துக்கொண்டான்.
"ஐ லவ் யூ திவ்யா"
இப்பொழுதும் அவள் கன்னங்களில் பிங்க் கலர் ஒட்டிக்கொண்டதை அவன் கvவனிக்க தவறவில்லை! அவளும் பதிலுக்கு "ஐ டூ லவ் யூ அகில்" என்று சொன்னாள்.
அவன் அவளுடைய கன்னத்தை தனது இரு கைகளால் பிடித்து, அவள் உதட்டை தனது உதட்டருகே கொண்டு வந்தான்!
இதன் பிறகு உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்!