நிதர்சனம்

____________________________________________________________________________________________________


"அப்துல் கலாம் சொல்வதில்தான்  நியாயம் இருக்கிறது!!!"
என்னடா இவன் அப்துல் கலாமை பற்றி இந்த டயலாக்  சொல்கிறானே என்று குழம்பி போகாதீர்கள். இதை படித்து முடிக்கையில், உங்களுக்கு புரியும்!!!

மாலை நேரம், தாம்பரம் இரயில் நிலையம்.

சகித்துக்கொள்ளும்படியான வெயில், அவசர அவசரமாக விழுப்புரத்திற்கு டிக்கெட் எடுத்து விட்டு நேராக ஒன்பதாம் நம்பர் பிளாட்பாரத்திற்கு விரைந்தேன்!!!

ஒலிப்பெருக்கியில் அறிவிப்புகளை தெரிவிக்கும் அந்த பெண்ணின் குரல் என் செவிகளில் பாட்டு பாடுவது போல் திரும்ப திரும்ப ஒலித்துகொண்டிருந்தது!!! பற்றாக்குறைக்கு, அவளோடு நானும் சேர்ந்து அறிவிப்பை ராகத்தோடு வாசித்துக்கொண்டிருந்தேன். இரண்டு வருடங்களாக ஒரே இரயிலில் பயணம் செய்வதால் எனக்கு ஏற்பட்ட சங்கீத ஞானம் அது!!!

பத்து ரூபாய்க்கு ஒரு lays பாக்கெட், ஒரு கப் டீ இவற்றை வாங்கிக்கொண்டு ஏதோ ஒரு கம்பார்ட்மெண்டில் ஏறினேன். நான் உட்கார்ந்த இருக்கையில் நடுத்தர வயது உள்ள இரு
நபர்கள் வந்து உட்கார்ந்தனர். பார்த்த மாத்திரத்தில் இருவரும் பொறுப்பான அரசு அதிகாரிகள் என்று தெரிந்தது. நிறைய பேசிக்கொண்டே வந்தனர். (கவனிக்கவும், பொறுப்பான அரசு அதிகாரிகள் என்ற உடனே, வேறு எதுவும் கற்பனை செய்ய வேண்டாம்...)


சற்று நேரத்தில் இரயில் கிளம்பியது, நானும் lays பாக்கெட்டை பிரிக்க ஆயத்தமானேன். இதற்குள் அந்த இரு அரசாங்க ஆசாமிகளின் பேச்சு நம் நாட்டின் மீதும், அரசியல்வாதிகளின் மீதும் சென்றது..


அரசாங்க ஆசாமி 1: நம்ம நாட்ட கெடுக்கறதே  இந்த அரசியல்வாதிங்கதான். அவனுங்கள சொல்லணும். நல்லா முன்னேர்ற நம்ம நாட லஞ்சத்துக்கு அடிமைபடுத்தி
நாசமாகிட்டனுங்க.

அரசாங்க ஆசாமி 2: "அரசியலுக்கு வந்து நாட்ட முன்னேத்தராங்களோ இல்லியோ, ஒரு தடவஆட்சிக்கு வந்துட்டா பணத்த கொள்ளைஅடிக்காம போக மாட்டானுங்க"

அரசாங்க ஆசாமி 1: "நம்ம நாட்ல தான் இப்படி எல்லாம்.. போன வருஷம் சிங்கபூர்  போயிருந்தேன்ல,ப்பா  ஊர் என்னமா இருக்கு!!! அரசியல்வாதிங்க எல்லாம்  நாட்டுக்கு என்னமா உழைக்கறாங்க! ஊரே  அவ்ளோ சுத்தமா இருக்குப்பா!" என்று பேசிக்கொண்டே தன் கையில் இருந்த  டீ கப்பை கீழே போட்டார், அதில் சற்று டீ மீதம் இருந்ததால் கீழே விழுந்ததும் டீ சிதறிவிட்டது!


இவர்கள் சொல்வதில் நியாயம் உள்ளது என்று மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டேன். இதற்குள் lays பாகேட்டும் தீர்ந்து போகவே, அதை  சீட்டிற்கு அடியில் போட்டு விட்டேன்!


சற்று நேரத்தில், சமோசா விற்பவன் தன்னுடைய கட்டை குரலினால் மேஜர் சுந்தரராஜன் போன்று  "சமோஸ் சமோஸ்"  என்று விற்றுக்கொண்டு வந்தான். அவனிடம் பத்து ரூபாய் கொடுத்து நாலு சமோசா வாங்கினேன். அவன் அதை லாவகமாக ஒரு பேப்பரில் மடித்து எனக்கு கொடுத்தான். பத்து நிமிடத்தில் செங்கல்பட்டு வந்தது, சமோசா அதற்குள்  காலியாகிவிட்டது. மடித்து கொடுத்த பேப்பரில் விரல்களை துடைத்தேன்.


சுண்டல், கடலை போன்ற வஸ்துக்களை வாங்கும்போது இலவச இணைப்பாக வருகின்ற அந்த பிட்டு பேப்பரை படிப்பது  எனக்கு அலாதி இன்பம் தரக்கூடியது. அது குங்குமமோ, ஆனந்த விகடனோ, அல்லது மூன்றாம் கிளாஸ் படிக்கும் சிறுவர்களின் நோட்டு புத்தகமோ... படித்து விட்டுதான் கீழே போடுவது!!!


அந்த வகையில், இன்று எனக்கு மேஜர் சுந்தரராஜன் கொடுத்தது ஒரு செய்தித்தாள்! அது அப்துல் கலாம் அவர்கள் எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி! அது,

"நம் நாடு ஒழுங்காக இல்லை, இத்தனை வளங்கள் இருந்தும் இன்னும் ஏழை நாடாக தானே உள்ளோம். நாட்டை இந்த நிலைமைக்கு ஆக்கியது அரசியல்வாதிகள்தான் என்று நீங்கள் சொல்லாதீர்கள்!

சிங்கபூருக்கு போகிறீர்கள், சிங்கபூர் விமான நிலையத்தில் இறங்கிய உடன் உங்களில் பலபேர் சிறந்த மனிதர்களாக மாறிவிடுகிறீர்கள். ஒரு துண்டு பேப்பரை கூட தெருக்களில் போடுவது இல்லை,  கண்ட இடத்தில எச்சில் துப்புவது இல்லை, சுவற்றில் சிறுநீர் கழிப்பதும் இல்லை.

சிங்கப்பூரில் மட்டும் தான் நீங்கள் சிறந்த மனிதனாக வாழ்வீர்களா? ஏன் இந்தியாவில் மட்டும் இப்படி?"

என்று எழுதி இருந்தது! இதை படித்து முடித்த உடனே, அந்த அரசாங்க ஆசாமி 1: கிராபிக்ஸ்-இல் என் மூளையில்   தோன்றி, சிங்கப்பூரில் எப்படி இருந்திருப்பார்  என்று நடித்து காட்டினார்... சிரிப்பாக வந்தது. ஆயிரம்தான் பேசினாலும் யதார்த்தம் என்பது இதுதான் என்று தெரிந்து கொண்டேன்!


நானும் கீழே போட்ட lays பாக்கெட்டை எடுத்து குப்பைதொட்டியில்  போட்டுவிட்டு என் இருக்கையில் உட்கார்ந்து வீடு போய் சேர்ந்தேன்!!!

இப்போது புரிகிறதா!!! நான் ஏன் அப்துல் கலாம் பற்றி டயலாக் சொன்னேன் என்று???