பிம்பிலிக்கே பிலாப்பி

     சட்டென்று ஒரு பெஸ்ட் ஐடியா தோன்றியது.

     வேகமாக "செல் சிட்டி" யை  நெருங்கினேன்.அந்த கடை பத்துக்கு பத்து அளவில், கண்ணாடி  கதவுடன் பளபளத்தது.  மேலே பார்த்தேன், யாரோ ஒரு வெள்ளைக்கார பெண் தனது அங்க லட்சணங்களை அனைவருக்கும் காண்பித்தவாறே நோக்கியா போனில் பேசிக்கொண்டிருந்தாள். அவளின் தலைக்கு மேலே எல் ஜி, சோனி எரிக்சன், மோட்டோரோலா, சீன மொபைல்கள் என அனைத்தும் வரிசையாக "குளோ எபெக்டுடன்" மின்னியது.

     கணினி, ஐ.சி-க்கள், ஹெட்செட்டுகள், பேனல்கள், ரீசார்ஜ் கார்டுகள் என கடைக்கு பொருத்தமான பண்டங்களை விளம்பர பலகையில் வைக்கலாமே  என்ற கண்ணிய எண்ணம் என் மூளையில் அப்போது தோன்றியது. ஒன்று கடையின் முதலாளி கலா ரசிகனாக இருக்க வேண்டும், இல்லையேல் டிசைன் செய்தவன் நம் ஊர் மக்களின் மன நிலையை பற்றி பிஎச்டி படித்திருக்க வேண்டும். கார்டு சுரண்ட வருபவர்கள், போனில் குறைபாடு உள்ளவர்கள் என அனைவரும் வெள்ளைக்காரிக்கு மயங்கி தன்னுடைய கடைக்கு வந்து விடுவார்கள் என்று முதலாளி நினைத்து விட்டார் போலும்.  என்ன கருமமோ, அந்த வெள்ளைக்காரி என்னையும் இரண்டாவது முறை பார்க்கவைத்தாள். நம் ஊர் "தொழில் அதிபர்களுக்கு" என்னே சிந்தனை! விளம்பர பேனரில் கூட மக்களை  கவர்ந்து விடுகின்றனர். கதவை திறந்து உள்ளே சென்றேன்.

     "ஒரு ஏர்டல் பத்து ரூபா டாபப்"- இது நான்.

     "ஈசியா? கார்டா?" இது செல் சிட்டி தொழிற்சாலயின் அதிபர்.

     "ஈசி தான்"

     "நம்பர போடுங்க"

     "சிங்கு சான் சிங்கு சான்"  என்ற நிறத்தில் சட்டை, கட்டை விரலை தவிர ஏறத்தாழ அனைத்து விரல்களிலும் மோதிரம், ஒரு மாதத்தில் நல்லா பூரிப்பு அடைந்த அவரது உடல், என அனைத்து சமாச்சாரமும் சமீபத்தில் கல்யாணம் ஆகி இருக்கும் என்பதற்கு சான்றாக இருந்தது.

     மாமனார் உழைப்பில் கிடைத்த கணையாழி சகிதமாய் இருந்த அவரின் கைகளிலிருந்து போனை வாங்கி, என்னுடைய நம்பரை அதில் இட்டேன்.

     ஐந்நூறு ரூபாய் தாளை கொடுத்தேன்.

     "அட, என்னப்பா நீ? சில்லறைய கொடுப்பா?"

     "ஐயையோ, சில்லறைய மறந்துட்டேன்"

     "ஏன்யா காலங்காத்தால தாலியறுக்குற? போனி வேற பண்ணிட்டேன், கடன் சொல்லாத. கொஞ்சம் இரு மாத்தி தர்றேன்"
   
     வெளியே சென்றார், அநேகமாக கறிக்கடைக்கு தான் சென்றிருக்க வேண்டும், அவன் தான் இந்நேரத்திற்கு சில்லறை பணம் பட்டுவாடா செய்யும் அளவிற்கு திராணி உள்ள தொழிலதிபர். வரும்போது கறிக்கடைகாரனிடம் கேட்டுவிட்டுதான் வந்தேன். இருந்தாலும் கிடைக்கவில்லை. இப்போது செல் சிட்டியின் அதிபர் கேட்பதால் கிடைத்துவிடும். தொழிலதிபர்களிடயே என்ன ஒரு ஒற்றுமை? இரண்டு நிமிடத்தில் வந்து,   நானூற்றி தொண்ணுறு ரூபாயை என் கையில் திணித்தார். "சரி வரண்ணே"- சொல்லிவிட்டு கிளம்பினேன்.

      காலைல பத்து மணிக்கி எவன் ஐந்நூறு ரூபாய்க்கு சில்லற கொடுப்பான்? என்னுடைய இந்த பெஸ்ட் ஐடியாவை நானே மெச்சிக்கொண்டு, எனக்கு நானே பாராட்டு பத்திரம் வாசித்துக்கொண்டேன்!

     இன்னும் நான்கு தெருக்களுக்கு அப்பால் இருக்கிறது, ரேஷன் கடை. அவனிடம் ஐந்நூறு ரூபாயை கொடுத்து அவன் திட்டுக்களுக்கு ஆளாக முடியாது. எனவே தான் காலையில் செல் சிட்டியின் தொழிலதிபரை தாலியறுத்தேன். அதிலும் அந்த ரேஷன் கடையில் பில் போடும் "ஆபீசருக்கு" இந்த ஊரிலே அனைவருக்கும் தான் தான் "படியளக்கும் பகவான்" என்ற எண்ணம் வேறு! இத்தனை இடைஞ்சலுக்கு இடையில், உங்களுக்காக தான் உட்கார்ந்து இருக்கிறேன் என்று அவ்வபோது காட்டிக்கொள்வார். சில நேரம், உப்பு போறாத விஷயங்களுக்கு கூட கோபப்பட்டு தன்னுடைய அதிகாரத்தை பற்றி பிரசங்கம் பேசுவார். நம் மக்களும், அவர் பேசுவதை கேட்டு சண்டையை நிறுத்திவிடுவர். முடிவில் ஏதோ காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டதை போல், "கௌரவம் படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் கௌரவமாக முகத்தை வைத்திருப்பது போல்"  தன் முகத்தை வைத்துக்கொள்வார். பெருமை மிகுதியால், அன்றைக்கு மட்டும்  சிரத்தையுடன் வேலை செய்வார், நுகர்வோர்களுக்கும் நல்ல உபசரிப்பு கிடைக்கும். 

      இந்த கௌரவ சமாச்சாரத்தின் பயனாக, பல தடவை சுமூகமாக பொருட்களை வாங்கியதுண்டு!

     இன்றும் "நம் நாட்டின் கண்கள்" ரேஷன் கடைக்கு வெளியே சண்டை போட்டால் நன்றாக இருக்குமே! பொருட்களை சுமூகமாக வாங்குவதற்காக சொல்லவில்லை. அந்த ஆபிசரின் கௌரவ முகத்தை காண்பதற்கு! நல்ல வேடிக்கையாக இருக்கும்.

     ரேஷன் கடை என்று இதற்கு நாமகரணம் சூட்டியவர் யார்? நியாயமான விலையில் கிடைப்பதால் (?) , நியாய விலைக்கடை என்று அரசு பெயர் வைத்துள்ளது. என்னை பொறுத்தவரை,  அநியாய விலைக்கடை என்று சொல்லலாம். அல்லது " irration " கடை என்றும் சொல்லலாம்.
 
     கடையை அடைந்தேன். அங்கே,  கடையோரத்தில் உள்ள சாக்கடை நன்னீரில் ஒரு சிறுவன், ஒரு அடி அளவுள்ள ஒரு குச்சியை விட்டு கப்பலோட்டிக்கொண்டிருந்தான். அநேகமாக பந்து விழுந்திருக்க வேண்டும். அதனருகில் ஒரு நான்கு சிறுவர்கள், அவனை கட்டளையிட்டு கொண்டிருந்தனர். என் யூகம் சரியாக இருந்தால், இதுதான் நடந்திருக்க வேண்டும்! அந்த சிறுவன் பந்தை அடித்திருப்பான், அது தெருவோர தீர்த்தவாரியில் ஸ்நானம் பண்ணிகொண்டதின் பயனாக இப்போது அவன் சாக்கடையை கிளறுகிறான்.

     ஆண்கள் கியூவில் ஒரு பதினைந்து பேர், பெண்கள் கியூவில் சுமார் ஒரு முப்பது பேர்.

     எப்போதும் அன்னப்பூரணிகளின் வரிசை தான் அதிகமாக உள்ளது!  ஆண்கள் கியூவில் கடைசியாக போய் நின்றேன். முன்பு எனக்கு தோன்றிய பெஸ்ட் ஐடியா இப்போதும் தோன்றியது. குடும்ப அட்டையை அதன் கவரிலிருந்து கழற்றினேன். கவரையும் குடும்ப அட்டையையும் இரண்டாக கையில் வைத்துக்கொண்டேன். கடைசியில் நின்று, எவ்வாறு கியூவில் முன்னேறலாம் என்று யோசனையில் இருந்தேன்.

     "ஆயிரம், ரெண்டாயிரம், நாலாயிரம், ஆறாயிரம், எட்டாயிரம், பத்தாயிரம்... பிம்பிலிக்கே பிலாப்பி" முன்னாடி இருந்தவரின் செல் போன் அடித்தது.

     அதை கேட்டதும் அனைவரின் பார்வையும் அவரின் மேல் இருந்தது. வித்தியாசமான டோன்களை வைப்பதில் நம் ஊர் மக்களை அடித்துக்கொள்ள முடியாது. சொல்லிவைத்தார் போல், அந்த செல்போன் ஆசாமியும் பாண்டியராஜன் போலவே தோற்றமளித்தார். அதே திருட்டு முழி! ஒருவேளை அவருடைய பரம விசிறியாக இருக்கலாம்!
  

     சற்று நேரத்தில் ஒரு பெண்மணி என்னை நோக்கி வந்தாள்.

     "தம்பி, வீட்ல அடுப்புல உலைய வச்சிட்டேன், கொஞ்சம் இந்த கார்டுக்கு மட்டும் கொஞ்சம் அரிசி வாங்கி தர்றீங்களா?"

     "ஐயையோ, என்கிட்டே ஏற்கனவே ரெண்டு கார்டு இருக்கே!"

     "ம்ச்," என்று சொல்லிவிட்டு தன்னுடைய இடத்தில் போய் நிற்க போனாள்.

     "த, எங்க சந்துல பூர்ற? கடசீல போ" என்று ஒரு சொர்ணாக்கா சொன்னாள்.

     "இன்னது, நான் இங்க தான் நின்னேன், அந்த தம்பிகிட்ட பேசிட்டு வந்தேன்"

     "சொம்மா, இந்த கதையெல்லாம் இங்க உடாத. போய் லாஸ்ட்ல நில்லு. அங்கேந்து ஆட்டினு வந்துடிச்சி"

     "தம்பி, சொல்லுங்களேன். இல்லன இவங்க இங்க நிக்க உடமாட்டாங்க"

     "ஆமாங்க, அங்க தான் நின்னுட்டு இருந்தாங்க" என்றவாரே அவர்களை நோக்கி சென்றேன். அந்த கணத்தில் என் தலை மீது 2-டி கார்டூனில் ஒரு பல்பு எரிந்தது.

     "இங்க பாருங்கமா, அந்த பொம்பள என்கிட்டதான் பேசிட்டு இருந்தாங்க, தள்ளுங்க"

     நான் கொஞ்சம் வல்கராக பேசவே, கொஞ்சம் சலசலப்பானது. சற்று நேரத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

     ஆபீசர் பார்வைக்கு இப்பிரச்சனையை எடுத்து சென்றனர்.

     வந்தார். சூடாக இருந்தார். கார்கில் பிரச்சனையை (?) சமாளித்தார் (!). சுமூக தீர்வு கண்டார். சிவாஜி கணேசன் முகபாவத்தோடு, தன் இருக்கையில் போய் உட்கார்ந்தார்.

     நிற்க, பல்பு எரிந்ததற்கான கர்மவினை இதுவல்ல.

     அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், நான் என்னுடைய இடத்திற்கு செல்லாமல், நான்கு நபர்களுக்கு முன் சென்று நின்றேன். மறுபடியும் காஷ்மீர் பிரச்சனை தொடங்கியது. விஷயம், ஆபிசரின் காதுகளில் விழுவதற்குள் "காம்பிரமைஸ்" ஆகி, சமாதானம் அடைந்து, நான் முன்னேற வழிவிட்டனர்!

     என்னை பார்த்து அனைவரும் "அடப்பாவி" என்ற வார்த்தையை கண்ணாலே பேசினர். எனக்கு சிரிப்பு கலந்த பெருமையாக இருந்தது. மறுபடியும் என் புத்திக்கு பாராட்டு சர்டிபிக்கேட் சமர்பிக்கப்பட்டது.

     பர்சில் இருக்கும் பணத்தை எடுத்து கையில் வைத்துக்கொள்வோம் என்று நினைத்தவனாய் பின்பக்க பேன்ட் பாக்கட்டில் கை விட்டேன்.

     அம்பது பைசா தான் இருந்தது.

     ஆஹா! கலவரத்தில் யாராவது அடித்திருக்கவேண்டும். எனக்கு முன்னாடி இருந்தவரும் வாங்கிவிட்டார். இப்போது நான் தான் வாங்கியாக வேண்டும். உடனே, வரிசையை விட்டு நகர்ந்து விட்டேன். வெளியே சொன்னால் அசிங்கம். நானூத்தி தொண்ணூறு ரூபாயும் அம்பேல்! யார் எடுத்திருப்பார்? அனைவரின் முகத்தையும் பார்த்தேன். ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

     இதற்கிடையில் கப்பலோட்டிய தமிழனின் துடுப்பில் பந்து சிக்கியது போலும். அவன் அதை எடுத்து மேலே தூக்கிபிடித்து,



     "பிம்பிலிக்கே பிலாப்பி" என்று சிரித்தவாறே சொன்னான்!