ஒரு ஆணின் ஆசை...



நீ ஏதேனும் பேச முற்படுகையில் அவசர அவசரமாக
உன்னிதழில் இதழ் பதிக்கும் ஆச்சர்யம் ஆசை.

உன் அதிகாலை தூக்கத்தில் உன்னோடு பேச;
உனையறியாமல் நீ உளறுவது ஆசை.

நெருக்கடியான சந்தையில் ஒருநொடி உன்னைத் தொலைக்க;
உன் உருண்ட கண்ணின் அவ்வொரு நொடி தவிப்பும் ஆசை.

எனையறியாமல் உன்னை உரசி நிற்கும் அந்த நொடியில்
நீ விவரமறியாமல் எனைப் பார்க்கும் பார்வையும் ஆசை.

எழுதிய கவிதையை நீ படித்துவிட்டு எனை ஏறெடுத்து
பார்க்கும் அந்த நொடி உன் கண்ணில் குதித்து செத்துவிட ஆசை.

இவ்வாசைகளை உன் காதறுகே மெல்ல சொல்ல
நீ வாய்மூடி சிரிப்பதைக் கண்டே உன் மடியில் உயிர் நீக்க ஆசை.

பெண்கள் தினம் ! ?

மார்ச் 8. சர்வதேச பெண்கள் தினம்.

உளவியில் ரீதியாகவும், உயிரியல் ரீதியாகவும் வாழ்வதற்கு பல சவால்களை எதிர்கொள்ளும் இனத்தின் தினம்.

(பெண்கள் தினத்தைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கையில் எனக்குள் எழுந்த பல கேள்விகளின் பிரதிபலிப்பே இந்தக் கட்டுரை)

நண்பன் ஒருவனிடம் கேட்டேன்.

எதுக்குடா பெண்கள் தினம் கொண்டாடறோம்னு?

அவன் சொன்னான்.

"பெண்கள் நம் நாட்டின் கண்கள் மச்சி, அவங்களுக்கு கொண்டாடாம வேற யாருக்குக் கொண்டாடப் போறோம்?"

நல்ல விஷயம் தான். கொண்டாடலாம்.

எவ்வுளவு தான் ஆராய்ந்து பார்த்தாலும் இறுதியாக எந்த ஒரு தினத்தையும் கொண்டாடுவதற்கு காரணமாக இரண்டைச் சொல்லலாம்.

1. அதிகம் கவனிப்பு தேவைப்படும் தினம். (பிற்படுத்தப்பட்ட, மக்களால் புறக்கணிக்கப்பட்ட, அபாயகரமான காரணிகளை நினைவு கூர்ந்து அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக கொண்டாடப்படுவது)

2. மற்ற தினங்களை விட மேன்மையான தினம் (சாதாரண நாளாக இல்லாமல், சிறப்பு பொருந்தியதின் காரணமாக கொண்டாடப்படுவது. பண்டிகைகள், வருடப்பிறப்புகள் இதில் அடங்கும்)

இந்த இரண்டில் எந்த காரணத்திற்காக பெண்கள் தினத்தைக் கொண்டாடுவது?

முதல் காரணத்திற்காக கொண்டாடுகிறோம் என வைத்துக்கொண்டால், பெண்களுக்கு மதிப்பு கொடுக்கப்படுவதில்லையோ என்ற கேள்வி எழுகிறது. மேலும் அதிகம் கவனம் தேவைப்படும் தினங்களின் பட்டியலில் அதிகமாகக் காணப்படுவது நோய்களின் தினம் தான். நோய்களின் கவனிப்புக்கு மத்தியில் என் தாயின் தினம் வருவது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

இரண்டாவது காரணத்திற்காக கொண்டாடுகிறோம் என வைத்துக்கொண்டால், மனிதனாகப் பிறந்த அனைவரும் சமம் என்று சொல்லப்பட்டு (?) வரும் இந்த காலத்தில் அதெப்படி பெண்களுக்கு மட்டும் இவ்வுளவு விமர்சையாக, பிரத்யேகமாக, சிறப்பாக உலக அளவில் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது? பெண்கள், உயிர் வாழ்வதற்குப் பல சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்ற கோணத்தில் பார்த்தால் மேன்மையானவர்கள் தான்.

மனிதச்சமூகத்தில் வாழ்வதற்கு கிட்டத்தட்ட இதே அளவுச் சவால்களை எதிர்கொள்ளும் திருநங்கைகளுக்கும்/திருநம்பிகளுக்கும் ஏன் இதில் பாதி அளவிற்குக் கூட வெளிச்சம் கிடைக்கவில்லை? அவர்களும் மனிதர்கள்தானே!

சீரான சம உரிமை கொண்ட பகுத்தறிவுபெற்ற மனிதச்சமூகத்தில் இந்த இரண்டு காரணத்தில் எதாவது ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு மகளிர் தினத்தினைக் கொண்டாடுவது என்பது பல கேள்விகளை எழுப்புகிறது. சரி அதுபோகட்டும்,

பக்கத்து தெருவிலிருக்கும் இட்டிலி கடை முதல் ஜெட் ஏர்வேஸ் வரை பெண்கள் தினத்தையொட்டி பல "கவர்ச்சிகரமான சலுகைகளை" அறிவித்து வருகின்றனர்.

பெண் சமூகம் என்ன விளம்பரப் பொருளா? போகிற வருகிறவனெல்லாம் அவளை வைத்து விளம்பரம் செய்ய? தீபாவளி/கிருத்துமஸ்/ரமலான் போன்ற பண்டிகைகள் வரும் காலத்தில் இருக்கும் சலுகைகளுக்கு ஒப்பாக இவர்கள் பெண்கள் தினத்தன்று அநியாயத்திற்கு சலுகைகளை அறிவித்துவருகின்றனர். சரி இதுவும் போகட்டும்.

இந்த நேரத்தில் காசி ஆனந்தனின் நறுக்கல் ஒன்று ஞாபாகத்திற்கு வருகிறது,

பெண்ணைக் குளிப்பாட்டி
அழுக்காக்குகிறார்கள்
சோப்பு விளம்பரம்.

இதுபோதாதென்று அவர்களை Weaker Sex என்று வேறு அழைத்துத் தொலைகிறார்கள் ஆணாதிக்கவாதிகள்!

கருவில் உருப்பெரும்போது அனைவரும் பெண்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளட்டும் ஆணாதிக்கச் சமூகம்.

பெண் எனப்படுபவளும் Homo sapien தான். ஆண்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தவளில்லை. எந்த காரணத்திற்காகவும் அவளுக்கென விழா எடுத்து கொண்டாட வேண்டாம்.

இருக்கட்டும்.

பெண்கள் தினத்தைக் கொண்டாடுவதில் அடியேனுக்கு ஆயரம் சந்தேகம் எழுந்தாலும் எனைச் சுமந்து பெற்றவளும் ஒரு பெண்ணாதலால், "பிலேட்டட்" பெண்கள் தின வாழ்த்துக்கள்!

ஊடல் போர்

ஊடல் சர்ச்சையால்
வார்த்தைகளற்ற பேச்சுவார்த்தை.
இறுதியில் ஜெயிப்பது அவர்கள் காதல்.

காதல் ஜெயித்த
திருப்தியின் ஓரத்தில்
விதைக்கப்படுகிறது,
அடுத்த ஊடல் சர்ச்சை.

விட்டுக்கொடுக்காமல் இருப்பதை
விட்டுக்கொடுக்க முடியாது,
அவளுக்கும் அவனுக்கும்.

ஒவ்வொரு முறையும்
ஊடலை உடைத்து எழத்
துடிப்பது காதல் என்று
அவளுக்கும் தெரியாது,
அவனுக்கும் தெரியாது!

அடடே!

வேகமென மாடிக்கு விரைந்து
காற்றை நுரையீரலில் திணித்து
கண்ணிரண்டையும் அகலக்கொண்டு
என்னிரு கைகளை விரித்து
உரக்கக் கத்தினேன்
உலகமே எனக்கு தான்.

மேல் வீட்டு ஆயா
வாயை பொளந்துகொண்டு
என்னை பார்த்தார்.

பொய் உண்மையாக வேண்டும்

உண்மைத் துறந்து கூறுகிறேன்
சிறந்த தோழி நீதானென்று - நட்பை
மறந்து பிதற்றுகிறேன்!

வேண்டுமென்றே சண்டையிடுகிறேன். ஊடல்
வேண்டுமென்பதற்காக- உன் பார்வை
தீண்டும்போதெல்லாம்,

ஊடல் கொண்டு நட்பைக்
கொன்று காதலுக்கு
உயிர்கொடுக்கிறேன்.

கொடுக்கும் உயிர்ப்பிச்சையை
துச்சமென எண்ணி நட்பின்
உச்சத்தில் நிற்கிறாய் நீ!

அனுதினமும் நட்பைக் கொல்வதால்
ஆகிறேன் தொடர்கொலைகாரன்
அவளென் தோழி - பிடித்த பொய்...!